அதிமுக ஆட்சிக்காலத்தில் பென்னிக்ஸ், ஜெயராஜ் என்ற இருவர் காவல் நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அந்த விவகாரத்திற்கு அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கடுமையான எதிர்வினையை ஆற்றியது. அதனையடுத்து ஆட்சி மாற்றம் நடந்து திமுக அரியணை ஏறியது. ஆனால், ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதற்கேற்ப திமுக ஆட்சிக்காலத்திலும் காவல் நிலைய மரணங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றனர். இதனால் தமிழக அரசுக்கு தொடர்ந்து பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், தமிழக காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் கௌரவ கொடி வழங்கப்பட்டது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று நடந்த விழாவில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இந்தக் கொடியினை வழங்கினார். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு காவல் துறை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது.


குடியரசுத் தலைவரினுடைய வண்ணக்கொடி என்ற மிக மிக உயர்ந்த அங்கீகாரத்தை நம்முடைய தமிழக காவல்துறை பெறுகிறது. அதனை வழங்குவதற்கு குடியரசுத் துணைத்தலைவர் வருகை தந்துள்ளார். இச்சிறப்பினை வழங்குவதற்காக வருகை தந்துள்ள குடியரசுத் துணைத்தலைவருக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.இது இரட்டிப்பு மகிழ்ச்சியை எங்களுக்கு வழங்குகிறது.தமிழக காவல் துறைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே கிடைத்திருக்கக்கூடிய வரலாற்றுமிகு பெருமை இது. தனிப்பட்ட ஒரு காவலருக்குக் கிடைத்த பெருமை அல்ல இது, ஒட்டுமொத்தமாக அனைத்துக் காவலர்களுக்கும் கிடைத்திருக்கக்கூடிய பெருமை. தமிழ்நாடு காவல் துறையின் குறிப்பிட்ட ஒரு சாதனைக்கு கிடைத்த விருது அல்ல, தமிழ்நாடு காவல் துறைக் காவலர்கள் 160 ஆண்டுகள் ஆற்றிய பணிக்குக் கிடைத்திருக்கக்கூடிய அங்கீகாரம் இது.


 



பெண்களுக்குக் காவல்துறையில் அதிகாரம் அளித்ததில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. அதை அளித்தவர் கருணாநிதிதான். கைரேகைப் பிரிவு,மோப்ப நாய் பிரிவு,புகைப்படப் பிரிவு,கணினித் தொழில்நுட்பப் பிரிவு,கடலோரப் பாதுகாப்புப் பிரிவு,மகளிர் கமாண்டோ பிரிவு எனப் பல்வேறு பிரிவுகள், பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக மட்டுமல்ல, முன்னணியிலும் நமது தமிழ்நாடு காவல் துறை விளங்குகிறது.


அகில இந்திய காவல் திறனாய்வுப் போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை கடந்த 30 ஆண்டுகளாகச் சிறப்பாக செயல்பட்டு, பல பதக்கங்களை வென்று வருவதை நினைக்கும்போது ஒவ்வொரு தமிழ்நாட்டவரும் பெருமை கொள்ளக்கூடிய அளவில் அமைந்திருக்கிறது.


மேலும் படிக்க | தமிழக இளைஞரை அதிரடியாக கைது செய்த மத்திய உளவுத்துறை!


கடந்த ஓராண்டு காலமாக காவல் துறையின் செயல்பாடு முன்பைவிட மிக அதிகளவில் பாராட்டும்படியாக உள்ளது. மதக் கலவரங்களோ, சாதி மோதல்களோ, மக்களைப் பீதிக்குள்ளாக்கக்கூடிய குற்ற நிகழ்வுகளோ இல்லை. தொழிற்சாலை நிறைந்த பகுதிகளில் அமைதி நிலவுகிறது. துப்பாக்கிச் சூடு இல்லை, கள்ளச்சாராயச் சாவுகளும் இல்லை. காவல் நிலைய மரணங்கள் குறைந்துள்ளன.


காவல் நிலைய மரணம் 2018-ஆம் ஆண்டு 17 என்று பதிவானது, 2021ஆம் ஆண்டு 4 மரணங்களாக குறைந்துள்ளது.
குறைந்துள்ளது என்றுதான் சொன்னேனே தவிர, முற்றிலும் இல்லை என்று நான் சொல்லவில்லை.காவல் நிலைய மரணங்களே இல்லை என்று சொல்லக்கூடிய நிலையை ஏற்படுத்தித் தாருங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். குற்றங்களை குறைக்கும் துறையாக இல்லாமல், குற்றங்கள் நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக நீங்கள் இருக்க வேண்டும். சில சிறு குற்றம் நடந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடக் கூடாது. பாலியல், போக்சோ சட்டங்களில் சிக்குபவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கியாக வேண்டும்” என்றார்.


மேலும் படிக்க | போட்டி அரசாங்கத்தை நடத்த முயற்சிக்கும் தமிழக ஆளுநர்: நாஞ்சில்சம்பத் குற்றச்சாட்டு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ