நெருங்குகிறது நிவர்: தமிழகத்தில் red alert, பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டது NDRF
மக்கள் பீதியடையாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, அரசாங்கம் மற்றும் மீட்புப் பணிக்குழுக்கள் அளிக்கும் வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை: நவம்பர் 25 ஆம் தேதி முழு வீச்சுடன் தாக்கவிருக்கும் நிவர் சூறாவளியை தமிழகம் எதிர்நோக்கியுள்ளது. நிவர் சூறாவளி புதன்கிழமை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூறாவளிக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுக்கள் (NCMC) எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
நவம்பர் 24 முதல் 26 வரை இந்த சூறாவளி ஆந்திரா, தமிழ்நாடு (Tamil Nadu) மற்றும் புதுச்சேரியை பாதிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) இயக்குநர் ஜெனரல் திங்களன்று தெரிவித்தார்.
இத்தகைய இக்கட்டான நேரத்தில், அனைத்து வித பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வது மிக முக்கியமானதாகும்.
மக்களின் பொதுவான பாதுகாப்பிற்கு கடைபிடிக்க வேண்டிய சில பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் மற்றும் தவிர்க்க வேண்டிய சில செயல்கள் குறித்து இங்கே காணலாம்:
செய்ய வேண்டியவை:
-குடிசை/ஓட்டு வீடுகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
-மக்கள் அமைதியைக் காத்து பதட்டப்படாமல் இருக்க வேண்டும்.
-வானொலி/தொலைக்காட்சி மூலம் அவ்வப்போது சமீபத்திய நிலவரத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும்.
-அனைத்து மின்சார மெயின்கள் மற்றும் எரிவாயு விநியோகத்தை பாதுகாப்பு கருதி அணைத்து வைக்கவும்.
-உங்கள் கதவுகளையும், ஜன்னல்களையும் மூடி வைக்கவும்.
-உங்கள் மொபைல் போன்கள் மற்றும் பிற கேட்ஜெட்களை முழுமையாக சார்ஜ் செய்து வைக்கவும்.
-உங்கள் ஆவணங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை நீர்ப்புகா பெட்டிகள் அல்லது பைகளில் வைக்கவும்.
-அத்தியாவசிய பொருட்களுடன் ஒரு அவசரநிலை கிட்டை (Emergency Kit) தயாராக வைத்திருங்கள்.
-உங்கள் வீடு பாதுகாப்பற்றதாக இருக்கும் என உங்களுக்குத் தோன்றினால், சூறாவளி தாக்கும் முன் அங்கிருந்து வெளியேறி விடுங்கள்.
செய்யக்கூடாதவை:
-மீனவர்கள் கடலுக்குள் செல்லக்கூடாது.
-பீதி அடைய வேண்டாம், வதந்திகளை நம்ப வேண்டாம்.
-சேதமடைந்த அல்லது கட்டுமானத்தின் கீழ் உள்ள கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம்.
-உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.
-மின்சார கம்பங்களிலிருந்து தொங்கும் மின் கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். அப்படி கம்பிகள் தொங்கிக்கொண்டிருந்தால், உடனடியாக மின் வாரியத்துக்கு தகவல் அளிக்கவும்.
ALSO READ: அலையின் உயரம் 8 அடி முதல் 18 அடி வரை இருக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
முக்கியமாக, மக்கள் பீதியடையாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, அரசாங்கம் மற்றும் மீட்புப் பணிக்குழுக்கள் அளிக்கும் வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையிலும், புயல் கடலைக் கடக்கும் இடங்களிலும் நவம்பர் 25 ஆம் தேதி காற்று 100 கி.மீ வேகத்தில் வீசும் என்று ஒரு புல்லட்டின் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மீன்பிடிக்க ஏற்கனவே புறப்பட்ட மீனவர்களும் திரும்பி வருமாறு உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தென் கடலோர ஆந்திர பிரதேசம், ராயலசீமா மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகளிலும் நவம்பர் 25 முதல் 26 வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: தமிழகத்துக்கு ரெட் அலர்ட்: வருகிறது நிவர் புயல், அதிகன மழைக்கான வாய்ப்பு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR