கஜா புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான தமிழகத்துக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என பினராயி விஜயனுக்கு கமல்ஹாசன் கடிதம்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 


புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, புயலார் பாதித்த பகுதிகளுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கிவருகின்றனர்.


இந்நிலையில், கஜா புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான தமிழகத்துக்கு நிவாரண 
உதவிகளை வழங்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; அண்மையில் வீசிய கஜா புயல், தமிழக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது. 


மக்கள் நீதி மய்யம் கட்சி, கேரளா அரசினையும் மக்களையும் தங்களால் இயன்ற உதவிகளை தமிழ்நாட்டிற்கு இப்பொழுது அளித்திட முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறது. இப்பேரிடர் காலங்களில் மனிதாபிமான உணர்வுகள் மக்களிடம் அதிகமாக மேலோங்கிட வேண்டும்.  


கஜா புயலில் தாக்கத்தினால் எங்கள் மக்கள் இழந்திருக்கும் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து, மீண்டும் வருதற்கு இன்னும் பல வருடங்களாகும். இருப்பினும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நமது சகோதரர்களின் இயல்பு வாழக்கை புனரமைக்கும் இப்பணியினை இன்றே துவங்கிட வேண்டும். 


பயிர்கள் சேதமடைந்து, மரங்கள் வேருடன் சாய்ந்து, படகுகளை இழந்து, மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்தையே இழந்து மிகக்கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். நாம் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு, உன்னதமான மானுடக்கருனையை உணர்த்திட வேண்டிய அதிதியாவசியமான தருணம் இது. மனிதாபிமானமே மனிதத்தின் அடிப்படை உணர்வு, அதுவே மண் அனைவரையும் ஒன்றிணைக்கும் உணர்வுப்பாலம். அதுதான், இன்று, இப்பொழுது, இங்கே எங்கள் தமிழ்நாட்டிற்கு மிகவும் தேவையான ஒன்று." அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.