Cyclone Tauktae: உருவானது ‘டவ் தே’புயல்; தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை
அரபிக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (மே 15) `டவ் தே` புயலாக வலுப்பெற்றது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் அடைமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: அரபிக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (மே 15) 'டவ் தே' புயலாக வலுப்பெற்றது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் அடைமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் நா.புவியரசன் நேற்று பேசினார். அதன்படி லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று முன்தினம் மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. அது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதைத் தொடர்ந்து 12 மணி நேரத்தில் புயலாகவும் வலுபெறக்கூடும். இப்புயலுக்கு 'டவ் தே (Tau te)' என பெயரிடப்பட்டுள்ளது. மியான்மர் நாடு பரிந்துரைத்துள்ள பெயர் இது.
Also Read | முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்கிறார் விஜயகாந்த்
'டவ் தே (Tau te)' புயல் காரணமாக இன்று (15-ம் தேதி) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், சூறைக் காற்றுடன் கூடிய கன முதல் மிக அட மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யலாம்.
16, 17 தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 18-ம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும்.
அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தென்கிழக்கு அரபிக்கடல், கேரள, கர்நாடக கடலோர பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் 15-ம் தேதியும், மத்திய கிழக்கு அரபிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் 16-ம் தேதியும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
Also Read | முதலமைச்சர் நிவாரண நிதிக்கு Rs 1 கோடி கொடுத்த நடிகர் சிவக்குமாரின் குடும்பம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR