தமிழகத்துக்கு தினமும் 2,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகவுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு
காவிரியில் இருந்து தினந்தோறும் தமிழகத்துக்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால் பயிர்கள் கருகின. இதனால் வேதனை அடைந்த பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.
இந்தநிலையில், காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நாள்தோறும் 2 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணை ஜூலை மாதம் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கர்நாடக அரசு ஜூலை மாதம் 11-ம் தேதி வரை தமிழகத்துக்கு தினமும் 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.