மழையால் தூத்துக்குடியில் வாழை பயிர்கள் சேதம்!
மழை காரணமாக தூத்துக்குடி பகுதியில் உள்ள வாழை பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று ஒகி புயலாக மாறியது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை கொட்டியது. பலத்த காற்று வீசியதால் 220 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. 50 மரங்கள் சரிந்தன. மரம் சரிந்து விழுந்து ஒருவர் பலியானார்.
நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று முழுவதும் மழை நீடித்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் தொடர்ந்து வானிலை மோசமாக இருந்ததால், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு மாலையில் வரக்கூடிய விமானமும் ரத்து செய்யப்பட்டது. இதனால் நேற்று தூத்துக்குடி–சென்னை இடையேயான 2 விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. எனவே, பயணிகள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.
இதனை தொடர்ந்து, தற்போது இப்பகுதியில் கடுமையான மழை பெய்த பிறகு தூத்துக்குடி பகுதியில் உள்ள வாழை பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.