Hosur International Airport Latest Update: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று விதி 110ன்கீழ் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கும், தொழில் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைக்கப்போகும் மாபெரும் அறிவிப்பு ஒன்றையும், தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்களின் அறிவு வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்போகும் அறிவுலகம் வரவேற்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் இந்த சட்டப்பேரவையில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில் முதலமைச்சர் ஸ்டாலின் ஒசூரில் விமான நிலையம் அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதில், "திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வளர்ந்து வருகிறது. அதில் மிக முக்கியமானது பெருந்தொழில்கள் - வளர்ச்சிமிகு தமிழ்நாடாகவும், அமைதிமிகு தமிழ்நாடாகவும் இருப்பதால், தமிழ்நாட்டை நோக்கிப் பல்வேறு நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருந்து தொழில் தொடங்குவதற்கு வந்து கொண்டேயிருக்கிறார்கள். இந்தத் தொழில் நிறுவனங்கள் மூலமாகத் தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சி அடைகிறது என்பது மட்டுமல்ல; தமிழ்நாட்டின் இளைய சக்தியான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.


உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநிலம்


2022 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 'நம்பர்-1' மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது. மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. புத்தொழில் வளர்ச்சிக்கான மாநிலங்களின் தரவரிசையில், 2020ஆம் ஆண்டில் கடைசி நிலையில் இருந்த தமிழ்நாடு, தற்போது சிறந்த செயற்பாட்டாளர் அந்தஸ்தைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.


மேலும் படிக்க | சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசே நடத்த வேண்டும்... காரணத்தை விளக்கிய ஸ்டாலின்!


இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030ஆம் ஆண்டிற்குள் 'ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக' உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவில் அடைவதற்காக, தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து வருவதை இதன் மூலம் அறியலாம். அனைத்து மாவட்டங்களிலும் தொழில்களைப் பரவலாக உருவாக்கி வருகிறோம். 


ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம்


இதில் மின்னணு மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தித் துறையில் ஓசூர் கடந்த சில ஆண்டுகளில் முதலீடுகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது. இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் நகரத்தினை, தமிழ்நாட்டின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்குவதற்காக, அங்கு நவீன உட்கட்டமைப்புகளை அமைக்கும் நோக்கில், பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது. 


அந்த வகையில், ஓசூர் நகரத்திற்கான ஒரு புதிய பெருந்திட்டம் (Master Plan) தயாரிக்கப்பட்டு, அது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஒசூர் மட்டுமல்லாது, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதியின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஒசூரில் ஒரு விமான நிலையம் அமைப்பது அவசியம் என இந்த அரசு கருதுகிறது. ஒசூரில் இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்பதனை இந்த மாமன்றத்தில் நான் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.


இதுவரை 4 பன்னாட்டு விமான நிலையங்கள்...


தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் நான்கு பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ளன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள விமான நிலையங்கள் பன்னாட்டு அங்கீகாரத்தை பெற்றது. சென்னை அருகே பரந்தூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு முன்னர் அறிவித்திருந்தது. தற்போது ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படுவது பெரும் அறிவிப்பாகும். மேலும் திருச்சியில் கலைஞர் பெயரில் மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். 


மேலும் படிக்க | 'ஸ்டாலின், உதயநிதி வாழ்க...' பதவியேற்பில் திமுக எம்பிகள் கோஷம் - முழக்கமிடாத இந்த 3 பேர்!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ