கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி ஊராட்சிக்குட்பட்ட போகிபுரம் கிராமம். விதைத்ததை நல்ல விளைச்சலோடு கொடுக்கும் இந்த ஊர்மண், செழிப்புக்கு பேர் போனது. ஆனால் செல்வத்திற்கு இல்லை. காரணம் ஊருக்கு நடுவே இருக்கும் சூளகிரி - சின்னாறு அணைக்கட்டு. இவ்வூர் மக்களின் செழிப்புக்கும், சோகத்துக்கு இதே அணைக்கட்டுதான் காரணம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


சூளகிரி சின்னாற்றின் குறுக்கே எம்பள்ளி அருகே இந்த அணைக்கட்டு அமைந்துள்ளது. 1986ஆம் ஆண்டு 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணைக்கட்டின் கொள்ளளவு சுமார் 81 மில்லியன் கனஅடி ஆகும். இந்த அணையில் சின்னாறு, பேரிகை ஏரி, பன்னப்பள்ளி ஏரி, அத்திமுகம் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து வரும், உபரி நீர் சேமித்து வைக்கப்பட்டு விவசாயத்திற்கு திறந்துவிடப்படுவது வழக்கம். இதன் நீர்பிடிப்புப் பரப்பு 143.62 ச.கி.மீ ஆகும். இதன் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 45 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிருந்த காமநாயக்கன்பேட்டை,ஒண்டியூர்,போகிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றி, நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. அப்போது போகிபுரம் கிராமத்தின் ஒருபகுதி மக்கள் மட்டும் வெளியேற்றப்படாமல் அங்கேயே இருந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். 



தற்போது 100 குடும்பங்களாக வளர்ந்துள்ள இக்கிராமத்தின் சோகத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். சுற்றியும் தண்ணீர் நடுவே ஊர், பள்ளி,கல்லூரிகளுக்கும் சாதாரண மளிகை பொருட்களின் தேவைக்கும் 5 கிமீ தூரத்தில் உள்ள சூளகிரிக்குதான் செல்ல வேண்டும். ஊருக்குள் மளிகைக்கடை, அங்கன்வாடி,நியாயவிலைக்கடை,தொடக்கப்பள்ளி, ஹோட்டல்கள் இப்படி எதுவும் கிடையாது. அப்படி வைத்தால் கடைகளுக்கு தேவையான சரக்குகளும், பள்ளிக்கூடத்திற்கு வருகைதரும் ஆசிரியர்களும் ஆற்றை கடந்துதான் வரவேண்டும். அது ஆகாத காரியம். 



இதிலிருந்து மாற்றுவழியாக, நேரத்தை மிச்சப்படுத்த 15 அடி ஆழமுள்ள ஆற்று நீரில் ஆபத்தான பரிசல் பயணம் மட்டுமே ஒரே Optionஆக உள்ளது. பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்களை பெற்றோர்கள் பரிசலில் அழைத்துச் சென்று, அழைத்து வருவதுமாக உள்ளது. சில நேரங்களில் சின்னஞ்சிறு பிள்ளைகளே, ஆபத்தான பரிசல் பயணத்தை தனியாக மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. 



இது சீசனுக்கு மட்டுமல்ல. ஆண்டில் 10 மாதங்கள் அணையில் நீர் இருக்கும்போதும் இதே நிலைமைதான். அப்போதெல்லாம் 400 மீட்டர் தூரத்தை பரிசலில் கடந்தால்தான் அக்கறைக்கு செல்ல முடியும். ஊரில் விளையும் பொருட்களையும், மாடுகளில் கறக்கும் பாலையும் அக்கறை கொண்டு சென்றதால் வீட்டில் உலை கொதிக்கும். அதற்காக உயிரை பணயம் வைப்பதை தவிற வேறுவழியில்லை என்கிறார்கள் இந்த கிராமமக்கள்.



கர்ப்பிணிப் பெண்கள், உடல்நல குறைபாடு நேரங்களில் அவசரமாகச் செல்ல முடியாத சூழலில் பலரிடம் முறையிட்டு, ஒருவழியாக பாலம் கட்டி கொடுக்க அதிகாரிகள் முன்வந்தனர். அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போகிபுரம் கிராமத்திற்கு செல்ல மேம்பாலம் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 30 சதவீதம் பணிகள் மட்டுமே நிறைவடைந்த நிலையில், பாலம் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. அதுகுறித்து கேட்டபோது அணையில் நீர் அதிகமாக உள்ளதால் பணிகளை தொடர முடியாதென பொதுப்பணித்துறையானர் கைவிட்டதாகச் சொல்லப்படுகிறது.



45 ஆண்டுகளாக தொடரும் இந்த அவலநிலையில் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமலும், சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்பதும், மேலும், திருமணத்திற்கு தயாரான ஆண்களுக்குப் பெண் கொடுக்க தயங்கும் அவலும் தொடர்கிறது. இதனால் வசதிகளை எதிர்பார்த்து ஏராளமான குடும்பங்கள் நகர் பகுதிக்குக் குடிபெயர்ந்து வருகின்றனர்.


மேலும் படிக்க | தூத்துக்குடியில் அடுத்தடுத்து 23 சிறார்கள் - வெளியான அதிர்ச்சி பின்னணி !!



ஆற்றை கடக்க முடியாவிட்டால் வனப்பகுதியினுள் ஒற்றையடிப் பாதையில் 10 கிமீ தூரம் பயணிக்க வேண்டும் என்பதால் கைவிடப்பட்ட உயர்மட்ட பாலத்தின் பணிகளைத் தொடர வேண்டுமென்பதே இக்கிராம மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது. இல்லம் தேடி கல்வி வந்துவிட்டது, அதெல்லாம் எங்களுக்கு அப்பறம் கொடுங்க, முதலில் இல்லங்களுக்குச் செல்ல பாலத்தை கொடுத்தால் நிம்மதியாக இருப்போம் என ஏக்கத்தோடு தெரிவிக்கின்றனர். 


மேலும் படிக்க | கோவில்பட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை - பழிக்குப் பழியா ?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ