திருட்டு பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு - சினிமாவை விஞ்சிய நண்பனின் துரோகம்!
தேனி அருகே கொள்ளையடித்த செல்போனை விற்று கிடைத்த பணத்தை பங்கிடும்போது ஏற்பட்ட தகராறில் இருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் நண்பர்கள் குழுவாக திட்டமிட்டு திருட்டோ அல்லது கடத்தலிலோ ஈடுபடுவதும், அவர்களின் திட்டம் நிறைவேறிய பின்னர் ஒருவர் மற்றவருக்கு துரோகம் இழைப்பதையும் பல படங்களில் பார்த்திருப்போம். அஜித்குமார் நடிப்பில் வெளியான 'மங்காத்தா', சூர்யாவின் 'அயன்', நானியின் 'கேங்ஸ்டர்' உள்ளிட்ட படங்கள் இதனை அடிப்படையாக வைத்து உருவானவைகளாகும். ஆனால், இந்த படங்களை போன்று கோடிகளை பங்கிடாமல், சில ஆயிரம் ரூபாயை பங்கிட்டபோது ஏற்பட்ட தகராறில் 2 நண்பர்களை கத்தியால் குத்திவிட்டு ஒருவர் தப்பியோடிய சம்பவம் தேனியில் அரங்கேறியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி. 38 வயதான இவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவர் வைத்திருந்த செல்போனை மூன்று மர்ம நபர்கள் வழிமறித்து கொள்ளை அடித்ததாக கூறப்படுகிறது. இதேபோல் பலரிடமும் கொள்ளையடித்த செல்போன்களை விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தை பங்கிடுவதற்காக அந்த மூன்று பேரும் பெரியகுளம் அரசு பணிமனை முன்பாக நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது மூன்று பேரும் சமாக பணத்தை பிரிக்காமல் ஒருவர் மட்டும் இருவரை காட்டிலும் அதிக தொகையை பங்காக கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் தகராறாக மாறி கத்திக்குத்தில் முடிந்தது. ஒன்றாக நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்த மூன்றுபேர் திடீரென கத்தியால் குத்தி தாக்கிக்கொண்டதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த மோதலில் நண்பர்கள் இருவரை சரமாறியாக கத்தியால் குத்திய மற்றொருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
மேலும் படிக்க | தம்பியின் செல்போன் திருட்டு - ஆத்திரத்தில் இளைஞரை வெட்டிக்கொன்ற அண்ணன்!
தகவலறிந்து வந்த போலீஸார் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கத்தியால் குத்தி தாக்கிக்கொண்டவர்கள் யார்? என தீவிர விசாரணையில் இறங்கினர். இதில், தென்கரை சென்சேவியர் தெருவைச் சேர்ந்த இஸ்ரவேல், வடகரை அழகர்சாமிபுரம் பகுதியை சேர்ந்த சூர்யா, உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து பால்பாண்டியிடம் செல்போனை கொள்ளையடித்தது தெரியவந்தது. நண்பர்களான இவர்கள் மூன்று பேரும் சாலையில் தனியாக நடந்து செல்பவர்களிடம் செல்போனை கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மோதலில் படுகாயம் அடைந்த இஸ்ரவேல் மற்றும் சூர்யா இருவரும் சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தப்பியோடிய நபரான ராபின் சிங்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருட்டு பணத்தை பங்கு பிரிக்கும்போது நண்பர்கள் என்றும் கூட பார்க்காலம் இருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | குடிபோதையில் செல்போன் டவரில் ஏறி 3 மணி நேரம் ஆட்டம் காட்டிய டவர் முருகன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR