தீபாவளிக்கு ஊருக்குச் செல்வோர் கவனத்திற்கு... அமைச்சரின் முக்கிய அறிவுரை!
Diwali Special Buses From Chennai: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
Diwali Special Buses Latest News Updates: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், 2024ஆம் ஆண்டு வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறையை சார்ந்த அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணிந்திரரெட்டி ஐஏஎஸ், போக்குவரத்துத் துறை ஆணையர், காவல்துறை உயர் அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
தீபாவளிக்கு முன் - 14,086 சிறப்பு பேருந்துகள்
அப்போது அவர்,"தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் அக். 28ஆம் தேதி முதல் அக். 30ஆம் தேதி வரையில், சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 4 ஆயிரத்து 900 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 11 ஆயிரத்து 176 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 2 ஆயிரத்து 910 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14 ஆயிரத்து 86 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும் படிக்க | முழு கொள்ளவில் குதிரை ஆறு அணை - வெள்ள அபாய எச்சரிக்கை!
தீபாவளிக்கு பின் - 12,606 சிறப்பு பேருந்துகள்
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், அதாவது நவ. 2ஆம் தேதி முதல் நவ. 4ஆம் தேதி வரை பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 3 ஆயிரத்து 165 சிறப்புப் பேருந்துகளும் மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9 ஆயிரத்து 441 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3 ஆயிரத்து 165 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 12 ஆயிரத்து 606 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
கிளாம்பாக்கத்திற்கு 24 மணிநேரமும் பேருந்து வசதி
தீபாவளிக்கு முன்பு அதாவது அக். 28ஆம் தேதி முதல் அக். 30ஆம் தேதி வரையில் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும்" என தெரிவித்தார். எனவே, இந்த மார்க்கங்களில் செல்லும் பயணிகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், "காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி, கிழக்கு கடற்கரை (ECR) மார்க்கமாக செல்லும் பேருந்து கோயம்பேட்டில் உள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். அதே நேரத்தில் பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
பொதுமக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கும், மாதவரம் பேருந்து நிலையத்திற்கும் செல்ல மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணிநேரமும் இயக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.
பேருந்து முன்பதிவு செய்ய...
மேலும், முன்பதிவு செய்ய கிளாம்பாக்கத்தில் 7 முன்பதிவு மையங்களும், கோயம்பேட்டில் 2 முன்பதிவு மையங்களும் செயல்படுவதாகவும் தெரிவித்தார். இதுமட்டுமின்றி இணையதளம் மூலமும், செயலி மூலமும் பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
வழித்தட மாற்றம்
அதேபோல், கார் மற்றும் இதர வாகனங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து பழைய மகாபலிபுரம் சாலை (OMR) திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழித்தட மாற்றம் குறித்து தனிப்பட்ட வாகனங்களில் ஊர் திரும்புவோர் நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | Gold Price Today: உச்சம் தொட்ட தங்கத்தின் விலை! ஒரு சவரனே இவ்வளவா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ