நீண்ட இழுபறிக்குப் பின் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் தேமுதிவுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது.


இதையடுத்து கூட்டணி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஆழ்வார்பேட்டையிலுள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர விடுதிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சுதிஷ் ஆகியோர் சென்றனர்.


சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வேட்பு மனு தாக்கலுக்கு முன்னதாக கூட்டணி இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.


40 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்றார்.