துரைமுருகன் கூறியதை நாகரிகம் கருதி வெளியில் சொல்ல மாட்டோம்: தேமுதிக சுதீஷ்
துரைமுருகன் இல்லத்திற்கு அனகை முருகேசன் மற்றும் இளங்கோவன் சென்றது அவர்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக என தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் கூறியுள்ளார்.
அதிமுக-வுடன் கூட்டணி உடன்பாட்டை தேமுதிக எட்டிவிடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், திமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தமிழக அரசியலில் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தேமுதிகவைச் சேர்ந்தமாவட்டச் செயலாளர்களான அனகை முருகேசன் மற்றும் இளங்கோவன் ஆகியோர் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு தலைவர் துரைமுருகனை சந்தித்துப் பேசினர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க விரும்புகிறது. அதிமுகவுடனா இல்லை திமுகவுடனா? என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
இதனையடுத்து தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிக நிர்வாகிகள் பேசியதாகவும், தன்னை சந்தித்த வந்த தேமுதிக நிர்வாகிகளிடமும் எங்களிடம் சீட் இல்லை என்று தான் கூறியதாக திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு தலைவர் துரைமுருகன் தெரிவித்தார்.
இதற்கு விளக்கம் அளித்து பேசிய தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ், திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்திற்கு அனகை முருகேசன் மற்றும் இளங்கோவன் சென்றது அவர்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே. அரசியல் காரணங்கள் இல்லை. அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை முடிவாகிவிட்டது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று சுதீஷ் கூறினார்.
மேலும் துரைமுருகன் தனது கட்சியை பற்றியும் தலைமையும் பற்றியும் என்னிடம் அதிகம் பகிர்ந்துள்ளார். அதை எல்லாம் வெளியில் கூறமுடியாது. எங்களுக்கு நாகரிகம் தெரியும்.