பாஜகவின் அறிவிக்கப்படாத மாநில தலைவர் எடப்பாடி - திமுக தாக்கு!
பாலாறு பிரச்சினையில் திமுக ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என கேள்வி எழுப்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கண்டன் தெரிவித்துள்ளார்!
பாலாறு பிரச்சினையில் திமுக ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என கேள்வி எழுப்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கண்டன் தெரிவித்துள்ளார்!
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...
“ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பாலாறு பிரச்சினை பற்றி கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் ஏன் பேசவில்லை” என்று பல பிரச்சினைகளைப் போல பாலாறு வரலாறும் தெரியாமல் கேள்வி எழுப்பியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதை உறுதியாக எதிர்த்ததும், அதற்கான வழக்கினை உச்சநீதிமன்றத்தில் ஆக்கபூர்வமாக நடத்தி, சாட்சிகள் விசாரணை வரைக்கும் கொண்டு வந்ததும் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் என்பது ஏனோ முதலமைச்சருக்குத் தெரியவில்லை. ஏன் அன்று துணை முதல்வராக இருந்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும், உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த சகோதரர் பொன்முடியும் 5.8.2008 அன்று ஆந்திராவிற்கே நேரில் சென்று, அன்றைய ஆந்திர முதலமைச்சர் மறைந்த ஒ.எஸ். ராஜசேகர் ரெட்டியை சந்தித்து “தமிழகத்தின் நலனுக்கு எதிராகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் தடுப்பணைகள் கட்டப்படாது” என்று உறுதிமொழியைப் பெற்று வந்தவர்கள் என்பதும் கூட முதலமைச்சருக்குப் புரியவில்லை. அது மட்டுமின்றி, “மத்திய நீர்வள ஆணையம் ஆய்வு செய்யும் வரை தடுப்பணை கட்டக்கூடாது” என்று ஆந்திர மாநில அரசுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு மூலம் அறிவுறுத்த வைத்ததும் தலைவர் கலைஞர்தான் என்பதைக்கூட அறியாமல், கழகம் ஆட்சியில் இருந்த வரை பாலாற்றில் ஒரு தடுப்பணை கூட கட்ட விடாமல் தடுத்து வைத்திருந்ததைக் கூடப் புரிந்து கொள்ளாமல் ஒரு முதலமைச்சர் “மைக்” கிடைத்த நேரத்தில் எல்லாம் பேட்டி கொடுப்பது வினோதமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது.
ஆனால், அதிமுக ஆட்சியில்தான் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டன. பணிகள் நடைபெற்ற நேரத்தில் கூட அதைத் தடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 19.7.2016 அன்றே வேலூர் மாவட்டத்தில் மிகப் பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அந்த ஆர்பாட்டம் நடக்கப் போகிறது என்று தெரிந்து கொண்ட அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் “தடுப்பணை கட்ட தடையாணை” கேட்டு வழக்குத் தொடர்ந்தது. தன்மீது உள்ள ஊழல் வழக்கில் பதைபதைப்புடன் ஓடோடிச் சென்று உச்சநீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்ற எடப்பாடி திரு. பழனிச்சாமி, அதே அக்கறையுடனும் வேகத்துடனும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஏன் தடையுத்தரவு பெறவில்லை? இதைத்தான் நேரத்திற்கேற்ப நிறம் மாறும் செயல் என்று கூற வேண்டும். முதலமைச்சரான பிறகு ஆந்திர முதலமைச்சருக்கு எத்தனை கடிதம் எழுதினார்? பொதுப்பணித் துறை அமைச்சராக இருக்கும் இவர் அம்மாநில பொதுப்பணித் துறை அமைச்சரிடமாவது பேசினாரா? பிரதமர் நரேந்திர மோடியை பல முறை சந்தித்துள்ள முதலமைச்சர் பாலாற்று பிரச்சினை குறித்து எத்தனை முறை பேசினார்? “என் பணி என்றென்றும் ஊழல் செய்து கிடப்பதே” என்ற ஒரே நோக்கத்துடன் ஆட்சியிலிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிச்சாமி எதிர்கட்சித் தலைவரைப் பார்த்தும், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரான என்னைப் பார்த்தும் இந்த கேள்வியை எழுப்புவது - ஆட்சியிருப்பது அவரா அல்லது நாங்களா என்ற கேள்வியை எழுப்புகிறது. இப்படி வேண்டுமென்றே விதாண்டாவாதம் பேசுவார்கள் என்று தெரிந்தோ என்னவோ “தமிழகத்திற்கும், ஆந்திராவிற்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் கோதாவரி நீரைக் கூட தமிழகத்திற்கு கொடுப்போம்” என்று கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்துவிட்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் பேட்டியளித்து விட்டுச் சென்றார். அப்படியென்றால் நாங்கள் பாலாறு பற்றியும் ஆந்திர முதலமைச்சரிடம் பேசினோம் என்றுதானே அர்த்தம்! அதுகூடத் தெரியாமல் பாலாறு பிரச்சினையில் ஆட்சியிலிருக்கும் முதலமைச்சர் சட்ட ரீதியாகவும் - பேச்சுவார்த்தை ரீதியாகவும் அடைந்த படுதோல்வியை மறைக்க, பா.ஜ.க.வின் ஊதுகுழலாக மாறி அக்கட்சியின் அறிவிக்கப்படாத மாநிலத் தலைவராகியிருக்கிறார் எடப்பாடி திரு.பழனிச்சாமி.
திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் “பொய் வழக்குகள்” என்பதால்தான் இன்றுவரை நிரூபிக்க முடியாமல் கிடக்கிறது. தலைமைச் செயலக விவகாரத்தில் கூட விசாரணை ஆணையம் அமைத்து மாதக்கணக்கில் அல்ல - வருடக் கணக்கில் விசாரித்து ஒன்றுமே கண்டுபிடிக்க முடியாத நிலையில் அந்த ஆணையத்தை இழுத்துமூட உயர்நீதிமன்றம்தான் உத்தரவிட்டது. ஜெயலலிதா போட்ட விசாரணை ஆணையமே கலைக்கப்பட்டுள்ள நிலையில், எப்படி வழக்குப் போடுகிறீர்கள் என்றுதான் நானும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அதில் நியாயம் இருப்பதால் அதற்கு இடைக்காலத் தடை வழங்கப்பட்டுள்ளது. அதிமுக அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் மீது தி.மு.க. கொடுத்த ஊழல் புகார்கள் ஆயிரக்கணக்கான பக்கங்கள் அடிப்படை ஆதாரம் உள்ள புகார்கள். ஆதாரம் இல்லாத ஊழல் புகார் என்று பீற்றிக் கொள்ளும் முதலமைச்சர் நேராக உச்சநீதிமன்றம் சென்று “என் மீதான சிபிஐ விசாரணைக்கு போட்ட தடை உத்தரவை விலக்கிக் கொள்ளுங்கள். நான் ஊழல் விசாரணையைச் சந்திக்கிறேன்” என்று கூறும் தெம்பும், திராணியும் இருக்கிறதா?
திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை, கொள்கை அளவில் கூட்டணி அமைப்பதில் வெளிப்படைத்தன்மை நிறைந்த கட்சி என்பது “திடீர்க் கட்சி இணை ஒருங்கிணைப்பாளரான” முதலமைச்சருக்கு தெரியாது. “குறைந்தபட்ச செயல் திட்டத்தை” உருவாக்கி “தேசிய ஜனநாயகக் கூட்டணியில்” திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெற்றதே தவிர, எடப்பாடி திரு.பழனிச்சாமி தலைமை வகிக்கும் அ.தி.மு.க. பிரிவு போல் பா.ஜ.க.விற்கும், பிரதமர் மோடிக்கும் கை கட்டி வாய்பொத்தி நின்று “அடிமைச் சாசனம்” எழுதிக் கொடுத்து விட்டு, “மாநில உரிமைகளை மனச்சாட்சியின்றி அடகு வைத்து விட்டு” திரைமறைவில் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கவில்லை. தமிழக நலனுக்காக மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்துள்ளோம் என்று கூறும் திரு பழனிச்சாமி, “அ.தி.மு.க. முதலமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் அளித்த கோரிக்கை மனுக்களில் உள்ள எத்தனை கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்று வெள்ளையறிக்கை வெளியிடத் தயாரா? ஊழலில் இருந்து தப்பிக்க மத்திய அரசுடன் சொந்த நலனுக்கான உறவே தவிர, தமிழக நலனுக்காக துளியும் இல்லை. பகல்வேடம் போட்டு முதலமைச்சர் பதவியை கைப்பற்றியதாலோ என்னவோ ஒரு முதலமைச்சர் பதவிக்குள்ள அடிப்படை நாகரீகத்தையும் பண்பாட்டையும் இழந்து எடப்பாடி திரு.பழனிச்சாமி பேசி வருகிறார். ஊழல் வழக்குகள் எந்தநேரத்திலும் விசாரணைக்கு வரும் என்பதால் இந்தப் பதற்றம்தான். வருகிறதே தவிர, தி.மு.க. கூறியிருக்கும் ஊழல் புகார்கள் ஆதாரமற்றது என்று அர்த்தம் அல்ல. ஆதாரம் இல்லாத புகார்கள் என்று கூறும் முதலமைச்சர் நான் விசாரணையை சந்திக்கத் தயார் என்று சொல்லும் துணிச்சல் இருக்கிறதா?
ஆகவே “சந்தர்ப்பவாதத்திற்கு” சரியான அடையாளம் பிளவு பட்ட அதிமுகவின் ஒரு பிரிவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் முதலமைச்சர்தானே தவிர, துணிச்சலுடனும், கொள்கை உறுதியுடனும் பா.ஜ.க.வையும் - ஊழல் அதிமுகவையும் தீரமுடன் நிமிர்ந்து நின்று எதிர்க்கும் கழகத் தலைவரோ - திராவிட முன்னேற்றக் கழகமோ அல்ல என்பதை எடப்பாடி திரு.பழனிச்சாமி இப்போதாவது புரிந்து கொள்வது நல்லது!" என தெரிவித்துள்ளார்.