தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்ச்சியை பாஜக அரசு கைவிட வேண்டும்: ஸ்டாலின்
விவசாயிகளின் வயிற்றில் கொடூரமாக அடிக்கும் திட்டங்களுக்கு, “திட்டமிட்டு” கெட்ட நோக்குடன் அனுமதி கொடுப்பது கடும் கண்டத்திற்குரியது என திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கும் முடிவை பாஜக அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழ்நாட்டில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கோரியிருப்பதற்கு, அதனால் ஏற்படப் போகும் பேரழிவை எண்ணிப் பார்த்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15, திருவாரூரில் 59, தஞ்சாவூரில் 17, அரியலூரில் 3 ,கடலூரில் 7, ராமநாதபுரத்தில் 3 என்று மொத்தம் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைத்து வேளாண்மையை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக்கட்டிவிட மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்து விட்டதா என்ற அச்சம் தமிழக விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
“விவசாயிகள் நலனுக்காகத் திட்டங்கள் தீட்டுகிறோம்” என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டு, அது வெளிப் பூச்சுக்குத்தான் என்று நிரூபிக்கும் வகையில், மறுபுறம் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் வயிற்றில் கொடூரமாக அடிக்கும் திட்டங்களுக்கு, “திட்டமிட்டு” கெட்ட நோக்குடன் அனுமதி கொடுப்பது கடும் கண்டத்திற்குரியது. காவிரிப் படுகையில் ஏற்கனவே 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க 18650 கோடி ரூபாய் முதலீட்டில் அனுமதி பெற்றுள்ள ஓ.என்.ஜி.சி மற்றும் “ ஸ்டெர்லைட் புகழ்” வேதாந்தா நிறுவனங்கள் வேளாண் மண்டலத்தையே சிதைத்து- விவசாயிகளின் வாழ்வாதாரத்தை, தமிழகத்தின் பொருளாதாரத்தை அடியோடு பிடுங்கியெறியும் விதத்தில் இப்படித் தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி கேட்பது மிகுந்த கவலையளிக்கிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் தங்களுக்கு உள்ள பேராபத்தை “நெடுவாசல் போராட்டம்”, “கதிராமங்கலம் போராட்டம்”, “நாகை, திருவாரூர் போராட்டம்”, “விழுப்புரம் முதல் ராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டருக்கு எழுச்சிமிகு மனித சங்கிலிப் போராட்டம்” எல்லாம் நடத்தி - தங்களின் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தும், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரோ, மாநிலத்தில் உள்ள முதலமைச்சரோ அந்த மக்களை - விவசாயிகளை அழைத்துப் பேசிட முன்வரவில்லை. உண்மையான ஜனநாயக உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிக்க மத்திய பா.ஜ.க. அரசு தயாராக இல்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
“தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் நிறைவேற்றப்படாது” என்று வாக்குறுதி அளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர், இப்போது இந்த அனுமதிகளை வழங்குவது ஏன் ? “மக்களின் விருப்பத்திற்கு மாறாக எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம்” என்ற முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி, பெட்டிப் பாம்பாய் அடங்கி அரவமற்றுக் கிடப்பது ஏன்? அடக்குமுறை சட்டங்களை ஏவி- விவசாயிகளின் உரிமைக்குரலை அடக்கி ஒடுக்கி முறித்துப் போட்டுவிடலாம் என்பதில் மட்டுமே முதலமைச்சர் திரு பழனிச்சாமி ஆர்வமும் அதிக கவனமும் செலுத்தி- விவசாயிகளின் நலனை முற்றிலும் புறக்கணிப்பது கடும் கண்டத்திற்குரியது.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.