ஓசூர் சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கக் கோரி தமிழக ஆளுநர், தலைமை தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரேரா மற்றும் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஆகியோரருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தி.மு.க. கட்சியின் கொறடா அர.சக்கரபாணி, எம்.எல்.ஏ., - துணைக் கொறடா கு.பிச்சாண்டி, எம்.எல்.ஏ., ஆகியோர் இன்று, காலை, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு தனபால் அவர்களை நேரில் சந்தித்து இக்கடிதத்தினை அளித்துள்ளனர். இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...


2016 சட்டமன்ற தேர்தலில் 55- ஓசூர் தொகுதியிலிருந்து திரு பி பாலகிருஷ்ணரெட்டி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது தாங்கள் அறிந்ததே. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சென்னை, சிறப்பு நீதிமன்றம் பொதுச்சொத்துக்களுக்கு நாசம் விளைவித்து கலவரம் செய்த வழக்கில் திரு பாலகிருஷ்ணன் குற்றவாளி என்று தீர்மானித்து அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருக்கிறது. “லில்லி தாமஸுக்கும், மத்திய அரசுக்குமான” (2013,7SCC, 653) வழக்கில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்றாண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால் 1951 ஆம் வருட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 8-ன் கீழ் உடனடியாக தகுதி நீக்கம் அடைந்து, அவர் வகித்து வரும் பாராளுமன்ற அல்லது சட்டமன்ற பதவி தானாகவே காலியாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே சட்டப்படி திரு பாலகிருஷ்ணனை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய தனியாக ஒரு அறிவிப்போ அல்லது தனியாக தமிழக சட்டமன்றத்திலிருந்து ஒரு அரசிதழோ வெளியிட வேண்டிய அவசியம் இல்லை.


திரு பாலகிருஷ்ண ரெட்டி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் “சிறப்பு நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று அறிவித்த தீர்ப்பிற்கு” தடை பிறப்பிக்கவில்லை என்பது தங்களுக்குத் தெரியும். அப்படி தடை கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது என்பதுதான் உண்மை. பிறகு திரு பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தை அணுகியும், சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கே உச்சநீதிமன்றமும் தடை கொடுக்கவில்லை. அவர் காவல்துறையிடம் சரண்டர் ஆவதற்கு கால அவகாசத்தை மட்டுமே உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முழுவதும் தற்போது அமலில் இருக்கிறது. ஆகவே “லில்லி தாமஸ் வழக்கில்” வழங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தற்போது திரு பாலகிருஷ்ணன ரெட்டி சட்டமன்ற பதவியை இழந்திருக்கிறார்.


திரு பாலகிருஷ்ண ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்ற “55-ஓசூர்” சட்டமன்ற தொகுதியை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காலியானதாக அறிவித்து அதற்கு வழக்கமாக வெளியிட வேண்டிய அரசிதழ் அறிவிப்பை  வெளியிடவும், தேர்தல் ஆணையத்திற்கு ஓசூர் தொகுதி காலியாகி விட்டது என்று அறிவிக்கவும் தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதே போல் தேர்தல் ஆணையமும் “55-ஓசூர்” சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. ஆகவே ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அரசிதழ் வெளியிட்டு, அத்தகவலை தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக அனுப்புமாறு தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவருக்கு மேதகு ஆளுநர் அவர்கள் உத்தரவிட்டு அத்தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறுவதற்கு வித்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.


இந்த தருணத்தில், போட்டி அதிமுகவின் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டவுடன் கொஞ்சம் கூட நேரத்தை வீணடிக்காமல் அவர்களின் தொகுதிகள் காலியாகி விட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப் பேரவைத் தலைவர் தெரிவித்து, தேர்தல் ஆணையமும் உடனே நடவடிக்கைகளை மேற்கொண்டதை மேதகு ஆளுநர் அவர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆகவே “55-ஓசூர்” தொகுதி காலியானது” என்று அறிவிக்காமல் சட்டப்பேரவைத் தலைவர் அமைதி காப்பது ஒருதலைப்பட்சமானது, ஓரவஞ்சகமானது- பாரபட்சமானது. இது போன்ற நடவடிக்கைகள் பேரவைத் தலைவர் மீது அரசியல் சட்டம் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கிறது. ஓசூர் தொகுதி தனது சட்டமன்ற உறுப்பினரை இழந்திருப்பதால் அங்குள்ள மக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள இயலாமல் தவிக்கிறார்கள். ஆகவே சட்டப்பேரவைத் தலைவர் தனது அரசியல் கடமையை நிறைவேற்ற மேதகு ஆளுநர் அவர்கள் உடனடியாக தலையிட்டு அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 


ஆகவே “55-ஓசூர்” சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அரசிதழ் வெளியிட்டு இடைத் தேர்தல் நடத்துவதற்கு வசதியாக உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.


அதே நேரத்தில் ஒரு  வேளை தமிழ்நாடு சட்டப் பேரவை தலைவர் அறிவிக்கவில்லையென்றாலும், “லில்லி தாமஸ்” வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் “55 ஓசூர்” தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையமே எடுத்து நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுடன் ஓசூர் தொகுதி இடைத் தேர்தலையும் அறிவிக்க  வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.