நீலகிரி மாவட்டம் கூடலுாரில், மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ளவர்களை, திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து நிவாரண பொருட்கள் வழங்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீலகிரி மாவட்டம் ஊட்டி அவலாஞ்சி, கூடலுார், பந்தலுார் ஆகிய பகுதியில் பெய்த மழையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் ஊட்டி வந்தடைந்த திமுக தலைவர் ஸ்டாலின், நடுவட்டம் இந்திரா நகர் பகுதிக்கு சென்று, மண் சரிந்து இறந்த, அமுதா, அவர் மகள் பாவனா வசித்த பகுதியை பார்வையிட்டார். 


அமுதாவின் கணவர் கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து ஆறுதல் கூறி, திமுக சார்பில் நிதி உதவி அளித்தார். தொடர்ந்து, கூடலுார் அரசு மேல்நிலை பள்ளியில் தங்கியுள்ள ஓவேலி மக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினார். தொரப்பள்ளி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி; அத்திபாளி முகாமில் தங்கி உள்ள, ஆதிவாசி உள்ளிட்ட மக்களை சந்தித்து, குறை கேட்டறிந்து, அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.தொடர்ந்து, இரவு, பந்தலுார் பகுதிகளில் மக்கள் தங்கள் முகாம்களுக்கு சென்று, நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.



நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அங்குள்ள ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா, அவலாஞ்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் 8-வது நாளாக மழை கொட்டியது. இதன் காரணமாக அங்குள்ள ஓடைகள், நீர்வீழ்ச்சிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அனுமாபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீடு இடிந்து விழுந்தது. இதில், அவரது மனைவி அமுதா (35), மகள் பாவனா (9) ஆகியோர் உயிரிழந்தனர். அவரது மகன் லோகேஷ்வரன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.