RK நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கிய ‘பணப்பட்டியல்’ முறைகேடுகளுக்கு காரணமான முதலமைச்சர், துணைபோன காவல்துறையினர், தேர்தல் அதிகாரிகள் மற்றும் சம்பந்தமின்றி வழக்கு தொடர்ந்தவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...


"சென்னை - ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது, முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க வைத்திருந்த “பணப் பட்டியலை” வருமான வரித்துறை கைப்பற்றிய வழக்கு விசாரணையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தையும், சென்னை உயர்நீதிமன்றத்தையும் திசைதிருப்பி பெரிதும் அவமதிக்கும் வகையில் செயல்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அரசியலமைப்புச் சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எவ்வளவு கீழ்த்தரமாக ஒரு முதலமைச்சராக இருப்பவர் கேவலப்படுத்தி இருக்கிறார் என்பதைப் பார்க்கும் போது பேரதிர்ச்சியாக இருக்கிறது.


7.4.2017 அன்று அமைச்சர் திரு விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து “பணப் பட்டியல்” கைப்பற்றப்பட்டு, அந்த விவரங்கள் வருமான வரித்துறையால் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டது. அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முதலமைச்சர், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மாநகர போலீஸ் கமிஷனருக்குக் கடிதம் எழுதியது. இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அதிமுக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மாண்புமிகு சத்யநாராயணா மற்றும் மாண்புமிகு சேஷசாயி ஆகியோர் தலைமையிலான அமர்வு, சென்னை கிழக்குப் பகுதி இணை ஆணையர் இந்த வழக்கு விசாரணையைக் கண்காணிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது. இந்திய தண்டனைச் சட்டம் 171B-யின் கீழான இந்தப் புகாரை மாஜிஸ்திரேட் அனுமதியுடன்தான் போலீஸ் விசாரிக்க வேண்டும் என்பதால், 23 ஆவது பெருநகர மாஜிஸ்திரேட்டிடம் முன் அனுமதி பெற்று, சென்னை அபிராமபுரம் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. ஆனால், அதில் தேர்தல் ஆணையம் தெரிவித்த அமைச்சர் திரு விஜயபாஸ்கர் பெயரும், பணப் பட்டியலில் இடம்பெற்றிருந்த முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களின் பெயரும் மறைக்கப்பட்டது.


இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் தொடர்பே இல்லாத “பி.எம். நரசிம்மன்” என்பவர் தனி நீதிபதியிடம் ஒரு வழக்கைத் தொடுத்து, பெருநகர மாஜிஸ்திரேட்டிடம் முன் அனுமதி பெற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதையும் மறைத்து, அதிமுக அரசு தனி நீதிபதி முன்பு வாதாடிய அலங்கோலம் நடந்திருக்கிறது; அற்பப் பொய்கள் அரங்கேறியிருக்கின்றன. “மாஜிஸ்திரேட் அனுமதி பெற்று புகாரின் மீது வழக்கு பதிவு செய்தேன்” என்று முதல் தகவல் அறிக்கையிலேயே காவல்துறை ஆய்வாளர் பதிவு செய்திருந்தும், அதை தனி நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை. “மாஜிஸ்திரேட் அனுமதி பெறவில்லை” என்ற காரணத்தைச் சொல்லி, அந்த முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட அதிமுக அரசு ஆணவத்துடன் உயர்நீதிமன்றத்திற்கே தவறான - பொய்யான தகவல் கொடுத்திருக்கிறது. போலீஸ் துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர், தன் பெயரிலோ தன் அமைச்சர்களின் பெயரிலோ வழக்கு வந்து விடக்கூடாது என்று திட்டமிட்டு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது என்பதையும் தனி நீதிபதியிடமிருந்து மறைத்து, எப்.ஐ.ஆரை ரத்து செய்ய “சதித்திட்டம்” தீட்டியிருப்பது திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு மருது கணேஷ் தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போது இன்று உயர்நீதிமன்றத்தில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது; தேர்தல் ஜனநாயக நெறியின் நெஞ்சில், அதிமுக அரசு கொடூரமான தாக்குதலை நடத்தியிருக்கிறது.


“எப்.ஐ.ஆர்”-ல் தேர்தல் ஆணையமே 21.4.2017 அன்று அளித்த புகாரில் உள்ள அமைச்சர் திரு விஜயபாஸ்கர், திருமதி ரம்யா, திரு ஆர். சின்னத்தம்பி ஆகியோர் பெயர்களும், அத்துடன் இணைக்கப்பட்ட வருமான வரித்துறையில் உள்ள முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களின் பெயர்கள் ஏன் இடம்பெறவில்லை? குற்ற எண் 583/27.4.2017-ல் E-4 அபிராமபுரம் காவல்நிலையத்தில் எப்.ஐ.ஆர் போட்ட போது இந்த பெயர்களை எல்லாம் நீக்கச் சொன்னது யார்? மொட்டையாக ஒரு எப்.ஐ.ஆரை போடவிட்டு தேர்தல் ஆணையம் அமைதி காத்தது ஏன்? குற்றம் சாட்டப்படாத பி.எம். நரசிம்மன் என்பவர் எப்.ஐ.ஆரை ரத்து செய்ய கோரியதை அதிமுக அரசு எப்படி அனுமதித்தது? உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த வழக்கைக் கண்காணித்த சென்னை மாநகர இணை போலீஸ் கமிஷனர் என்ன செய்து கொண்டிருந்தார்? உயர்நீதிமன்றமே கண்காணித்த விசாரணையில் தேர்தல் ஆணையம் கோட்டை விட்டது ஏன்? தேர்தல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டும் தன் மீது எப்.ஐ.ஆர் போட்டு விடாமல் சென்னை மாநகர காவல்துறையை முதலமைச்சர் தடுத்தது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா? கொடுத்த புகாரை திருத்தி மறைத்து எப்.ஐ.ஆர் போட்ட அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று அடுக்கடுக்கான கேள்விகள் அணி வகுத்து நிற்கின்றன.


ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்யும் “பணப்பட்டியல்” தொடர்பான புகாரில் செய்யப்பட்டுள்ள முறைகேடுகளுக்கு காரணமாக இருக்கும் முதலமைச்சர், துணை போன போலீஸ் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள், சம்பந்தமே இல்லாமல் வழக்குப் போட்டவர் உள்ளிட்ட அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக தேர்தல் ஆணைய புகாரை மறைத்து எப்.ஐ.ஆர் போட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையமே பரிந்துரை செய்ய வேண்டும். இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் குறித்தும் தனியாக துறை ரீதியான விசாரணைக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். இந்த மன்னிக்க முடியாத குற்றத்திற்கு துணை போனவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் ஜனநாயக ரீதியிலான தேர்தலின் மீதும் அதற்குப் பொறுப்பான தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்களுக்கு நல்லெண்ணமும் நம்பிக்கையும் பிறக்கும் என்பதால் வருமான வரித்துறையின் அறிக்கைப்படியான புகாரின் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு இந்திய தேர்தல் ஆணையமே பரிந்துரை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." எனகுறிப்பிட்டுள்ளார்.