`மாநகரத் தந்தை` முதல் `தமிழக முதல்வர்` வரை - மு.க.ஸ்டாலின் குறிப்புகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயணம், சிறைப்பயணம், சாதனைகள், அவர் வாங்கிய விருதுகள் என திமுகவில் அவரின் படிப்படியான வளர்ச்சியை குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய "உங்களில் ஒருவன்" புத்தகத்தின் முதல் பாகம் இன்று வெளியாகிறது. இந்நிலையில், அவரின் சாதனைகள், வாழ்க்கை பயணம், சிறைப்பயணம், அவர் வாங்கிய விருதுகள் என திமுகவில் அவரின் படிப்படியான வளர்ச்சியை குறித்து பார்ப்போம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் "மாநகரத் தந்தை" என்ற பெருமையை 1996 உள்ளாட்சி தேர்தலில் பெற்ற தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 2வது முறை 2001ஆம் ஆண்டு மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2006-ல் தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், 2009-ம் ஆண்டு தமிழகத்தின் முதல் துணை முதல்வர் பொறுப்பையும் ஏற்றார்.
மக்கள் நலத் திட்டங்களில் மிகுந்த அக்கறை கொண்ட தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பல திட்டங்களை நிறைவேற்றினார். மக்களிடம் எளிமையாகப் பழகக்கூடியவர். கழக முன்னோடிகளை மதித்து, அவர்களுக்குப் பொற்கிழி எனும் நிதி வழங்கி உதவியவர்.
தளபதி மு.க.ஸ்டாலின் விருதுகள்:
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பொது வாழ்வுப் பணிகளைப் பாராட்டி லண்டன் ஐரிஷ் பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை "டாக்டர் பட்டம்" வழங்கி சிறப்பித்துள்ளன.
அமெரிக்காவின் "கென்டகி கர்னல்" விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தளபதி மு.க.ஸ்டாலினும் கிரிக்கெட் போட்டியும்:
கார்கில் போர் நடந்தபோது, நிதி திரட்டுவதற்காக சென்னையில் நடந்த கிரிக்கெட் காட்சிப் போட்டியில் பங்கேற்று, புகழ்பெற்ற வீரர்களான கபில்தேவ், ஸ்ரீகாந்த் ஆகியோருடன் சிறப்பாக விளையாடினார்.
தமிழகம் வந்த ஆஸ்திரேலிய அரசியல் பிரமுகர்களைக் கொண்ட கிரிக்கெட் அணியுடனும், தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அணி விளையாடி வெற்றி பெற்றது.
டெசோ:
ஈழ மக்கள் சுய உரிமை பெறுவதற்கான தனது நிலைப்பாட்டை வலியுறுத்துவதற்காக பல்வேறு இயக்கங்களை ஒருங்கிணைத்து தொடங்கப்பட்ட டெசோ அமைப்பின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சர்வதேச அரங்கின் கவனத்துக்கு கொண்டு சென்ற மு.க.ஸ்டாலின், ஐநா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நவநீதம் பிள்ளை அவர்களை நேரில் சந்தித்து தீர்மான நகல்களை வழங்கி, அவற்றை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியதை தொடர்ந்து ஐநாவின் சார்பில் ஈழ மண்ணில் நேரடி ஆய்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மு.க.ஸ்டாலின் சாதனைகள்:
துணை முதல்வராக பொறுப்பேற்றவுடன் நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் திட்டங்கள், கூட்டுக் குடிநீர் திட்டங்கள், பாதாள சாக்கடை பணிகள் என எத்தனையோ சாதனைகளை பட்டியலிட்டாலும் அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்காத இடம்பிடித்த ஒரு நிகழ்வும் நடந்தேறியது. மாநிலம் முழுவதும் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் தானே பங்கேற்று மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்தவர்களுக்கு நிதியுதவி, கலைஞர் வீடு வழங்கும் திட்டம் என அத்தனை திட்டங்களையும் பலநூறு மணிநேரங்கள் நின்றபடியே மு.க.ஸ்டாலின் வழங்கிய சம்பவம் புதிய கின்னஸ் சாதனைக்கு ஒப்பானது.
1996 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாள் முதல் 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் நாள் வரை சென்னை மாநகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, சென்னையில் 10க்கும் மேற்பட்ட பாலங்களை கட்டி போக்குவரத்து நெரிசலுக்கு முடிவைக் கொண்டு வந்தார். பொது சுகாதாரம், சாலை வசதிகள், பூங்காக்கள் போன்றவற்றில் தளபதி செயல்படுத்திய திட்டங்கள் சென்னையை சிங்கார சென்னையாக மாற்றியது. மேலும் மழைக்காலம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் விரைந்து செயல்பட்டு, பாதுகாப்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதால் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளார். தொடர்ந்து 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு 2002ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் நாள் வரை 8 மாதங்கள் மேயராக பணியாற்றினார்.
2006 ம் ஆண்டு உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், 2009 ம் மேமாதம் தமிழக துணை முதல்வராகவும் ஆட்சிப்பணியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த மு.க.ஸ்டாலின் எண்ணிப் பார்க்க முடியாத மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றினார்.
2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் பொது கொளத்தூர் தொகுதியில் நின்றபோது, பொய் பிரச்சாரங்களின் பலத்தில் நின்ற எதிர்கட்சியிடம் பெரும்பான்மை இடங்களில் திமுக தோற்றபோதும் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இன்றைக்கும் தினசரி மக்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் வாரிசு என்பதை நிரூபித்து வருகிறார்.
அதைத்தொடர்ந்து 2016, 2021 சட்டமன்ற தேர்தல்களில் அதே தொகுதியில் வென்று, முதல்வர் பொறுப்பேற்றுள்ளார்.
கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்:
1966 ஆம் ஆண்டு முதல் தனது 13வது வயதில் இருந்து திமுக சார்பில் பொதுக்கூட்டங்களை நடத்தி, பிரச்சாரங்கள் மேற்கொண்டு கழக பணி ஆற்றி வருகிறார்.
1967 - கோபாலபுரம் இளைஞர் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை அழைத்து நடத்திய பொதுக்கூட்டத்தில் முதல்முறையாக மேடையில் உரையாற்றினார்.
1974 - கழக பொதுக்குழு உறுப்பினராக தேர்வானார்.
1976 - மிசா சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைபட்டார்.
1985 - திமுக இளைஞரணி செயலாளராக தேர்வானார்.
1989 - தொடர்ந்து 3 முறை ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ பொறுப்பேற்றார்.
1996 - சென்னை மாநகர மக்கள் தேர்வு செய்த முதல் மேயராக பொறுப்பேற்று மீண்டும் வென்று 2002 ஆம் ஆண்டு வரை மேயர் பணியாற்றினார்.
2003 - கழக துணைப்பொதுச்செயலாளராக தேர்வானார்.
2008 - கழக பொருளாளர் பொறுப்பேற்றார்.
2009 - தமிழ்நாட்டின் முதல் துணை முதலமைச்சராக தேர்வு.
2011 - கொளத்தூர் தொகுதியின் முதல் எம்.எல்.ஏ.வாக தேர்வு.
2016 - மீண்டும் கொளத்தூர் எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வானார்.
2017 - கழக செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
27-08-2018 அன்று திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் பொறுப்பினை ஏற்றார்.
தளபதி ஸ்டாலின் அவர்களின் போராட்ட வரலாறு - சிறைக்குறிப்புகள்:
1976 - மிசா கைது - ஓர் ஆண்டு சிறை - 1.2.1976
1981 - கைலாசம் விசாரணை கமிஷன் சட்ட நகலை எரித்துக் கைது - 1.4.1981
1983 - ஈழத் தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை உயர் ஆணையர் அலுவலகத்தின் முன் மறியல் - கைது - 11.10.1983
1985 - சட்டமன்ற தி.மு.க அலுவலகத்தைக் கைப்பற்றுவதை எதிர்த்துப் போராடி கைது - 2.6.1985
1987 - இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம் - கைது - 10.1.1987
1987 - சென்னைக் குடிநீர் பிரச்னை கைது - 25.7.1987
1987 - வெடிகுண்டு சட்டப் பிரிவில் கைது - 11.1.1987
1992 - இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அறக்கட்டளையை அரசு ஏற்று நடத்தப் போராட்டம் - 1.9.1992
1993 - ரயில் நிறுத்தப் போராட்டம் - இந்தி எதிர்ப்பு கைது - 21.3.1993
1993 - திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பரிதி இளம்வழுதி அவர்களை கைது செய்ததை கண்டித்து போராட்டம் நடத்தி கைது - 22.4.1993
1993 - யிரம் விளக்கு பகுதியில் குடிநீர் வழங்கக் கோரி சாலைமறியல் கைது - 7.8.1993
1994 - ஜெயலலிதா ஆட்சியை கண்டித்து மறியல் நெல்லையில் கைது - 15.12.1994
1994 - 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி சென்னை அண்ணா தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் காஞ்சிபுரத்தில் கைது - 21.6.1994
1994 - கழக கொடியேற்றத் தடை கைது, கழக முன்னணியினர் மீது தடியடி - 22.2.1994
1994 - துரோகிகளுக்கு துணை போகும் போலீசைக் கண்டித்து மறியல் கைது - 22.2.1994
1995 - ‘சேஃப்கார்ட் ரிசர்வேஷன்’ சட்டத்திருத்தம் கோரி சென்னை எழும்பூர் இரயில் நிலையம் முன்பு மறியல் - 5.7.1995
2001 - மேம்பாலம் பொய்வழக்கு கைது - 27.6.2001
2002 - ஜெயலலிதா ஆட்சியை கண்டித்து மறியல் கைது - 21.10.2002
2003 - ராணி மேரிக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் - கைது - 9.4.2003
2003 - திரு. முரசொலி செல்வம் மற்று ‘தி இந்து’ என்.ராம் அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் கைது - 8.11.2003
2003 - பொடா, டெஸ்மா சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டம் கைது - 15.12.2003
2004 - ஜெயலலிதா அரசை கண்டித்து போராட்டம் கைது - 23.7.2004
2005 - சென்னை மாநகராட்சி வார்டு இடைத்தேர்தலில் திமுக-வினர் தாக்கப்பட்டதை கண்டித்து அதிமுக அரசிற்கு எதிராக போராட்டம் கைது - 19.4.2005
2006 - எம்.ஜி.ஆர் நகரில் 42 பேர் இறந்த விவகாரத்தில் ஜெயலலிதா உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டம் கைது - 31.1.2006
2011 - திமுக திருவாரூர் மாவட்ட செயலாளர் திரு.பூண்டி கலைவாணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தர்ணா போராட்டம் - கைது - 30.7.2011
2011 - திமுகவினர் மீது பொய்வழக்கு போட்டு கைது செய்வதை கண்டித்து போராட்டம் நடத்தி கைது - 1.8.2011
2016 - காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தாத தமிழக அரசை கண்டித்து தர்ணா கைது - 16.9.2016
2017 - ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் கைது - 20.1.2017
2017 - சட்டமன்றத்தில் இருந்து திமுகவினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதை கண்டித்து சென்னை கடற்கரை காந்தி சிலை முன்பு போராட்டம் செய்து கைது - 18.2.2017
2017 - விவசாயிகளுக்கு ஆதரவாக மாநிலம் தழிவிய போராட்டம், திருவாரூரில் கைது - 24.4.2017
(Zee Disclaimer: இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவலும் திமுக சார்பில் அளிக்கப்பட்டவை. இதில் ஏதேனும் தவறான தகவல் அல்லது குறுக்கீடு ஆகியவற்றிற்கு Zee Media Corporation Ltd பொறுப்பேற்காது)