அதிமுக சட்ட ஆலோசகரும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள் சபாநாயகருமான டாக்டர் P.H.பாண்டியன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும் மூத்த அதிமுக நிர்வாகியுமான பி.ஹெச். பாண்டியன் (PH Pandian) உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.


இந்தநிலையில், அவரது மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் தலைவரும், அதிமுகவின் தொடக்ககால தலைவர்களில் ஒருவருமான பி.எச்.பாண்டியன்  உடல்நலக் குறைவால் காலமானதை அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன்.


நெல்லை மாவட்டம் கோவிந்தப்பேரியைச் சேர்ந்த பி.எச். பாண்டியன் இளம் வயதில் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 40 வயதுக்கு முன்பாகவே தமிழக சட்டப்பேரவையின் தலைவராக பொறுப்பு  ஏற்று திறம்பட செயல்பட்டவர். சட்டப்பேரவைத் தலைவராக பணியாற்றிய காலத்தில் அவரது சில முடிவுகள் சர்ச்சைக்குள்ளானாலும், பல்வேறு விஷயங்களில் மிகவும் துணிச்சலாக முடிவெடுத்தவர்.


4 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய பாண்டியன், சிறந்த கல்வியாளரும், வழக்கறிஞரும் ஆவார். என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தவர். பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிக் கொள்கையையும், அதற்காக நான் நடத்திய போராட்டங்களையும் பல்வேறு தருணங்களில் அவர் வெளிப்படையாக பாராட்டியிருக்கிறார்.


பி.எச். பாண்டியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.