உலகில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதைக் குறித்து பாமக கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த அறிக்கையில் கூறியதாவது:-


உலகில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவின் நிலையே இப்படி என்றால், தமிழகத்தின் நிலையை நினைத்துப் பார்க்கவே கவலையாக உள்ளது. மகளிரை பாதுகாப்பது தான் மத்திய, மாநில அரசுகளின் முதன்மைக் கடமைகளில் ஒன்று எனும் நிலையில், அதை ஆட்சியாளர்கள் நிறைவேற்றத் தவறியது கடுமையாக கண்டிக்கத்தக்கது.


தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை சார்பில் உலகம் முழுவதும் 193 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளில், மகளிர் பாதுகாப்புக்கு மத்திய, மாநில அரசுகள் எந்த முக்கியத்துவமும் தருவதில்லை என தெரியவந்துள்ளது. அண்மைக்காலங்களில் கடுமையான போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானும், சிரியாவும் கூட முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் தான் உள்ளன. கடுமையான சீரழிவுகளை சந்தித்து வரும் சோமாலியா நாடு இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் தான் உள்ளது. ஆனால், இந்தியா முதலிடத்தில் உள்ளது. சோமாலியாவில் மகளிருக்கு உள்ள பாதுகாப்பு உத்தரவாதம் கூட இந்தியப் பெண்களுக்கு இல்லை என்பது நமது ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டிய ஒன்றாகும்.


2011&ஆம் ஆண்டில் இதே நிறுவனம் நடத்திய மகளிர் பாதுகாப்பு குறித்த கணக்கெடுப்பில் இந்தியா நான்காவது இடத்தில் இருந்தது. அப்போதே மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால், மகளிர் பாதுகாப்புக்காக சிறு துரும்பைக் கூட இந்தியா மேற்கொள்ளவில்லை என்பது தான் உண்மை. பாலியல் வன்கொடுமைகள் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்துக் கொள்வது, பொது இடங்களில் பாலியல் சீண்டல்கள், குடும்ப வன்முறைகள் ஆகியவை தான் பெண்களுக்கு எதிராக அதிக அளவில் இழைக்கப்படும் கொடுமைகள் என்று கூறப்படுகின்றன. இவை அனைத்துமே தடுக்கப்பட வேண்டிய குற்றங்களாகும்.


இந்தியாவில் 2007 முதல் 2016 வரையிலான 10 ஆண்டுகளில் மகளிருக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 83% அதிகரித்துள்ளது. பொருளாதாரத்திலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திலும் இந்தியா மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருப்பதாக பெருமிதம் தெரிவிக்கப்படும் நிலையில், மகளிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பது நிச்சயம் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதாக அமையாது.


இந்தியாவின் நிலை இப்படியென்றால், தமிழகத்தின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டில் 6940 ஆக இருந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை, 2012 ஆம் ஆண்டில் 7192 ஆகவும், 2013 ஆம் ஆண்டில் 7475 ஆகவும், 2014 ஆம் ஆண்டில் 7980 ஆகவும், 2015 ஆம் ஆண்டில் 8,000 ஆக அதிகரித்திருக்கின்றன. 2012 &16 வரையிலான 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 37,577 ஆகும். இவற்றில் பாலியல் சீண்டல்கள், வரதட்சனைக் கொடுமை, குடும்ப வன்முறை, பெண்களின் உறுப்புகளை சிதைத்தல் உள்ளிட்ட குற்றங்கள் அடங்கும். அதுமட்டுமின்றி, கடந்த 5 ஆண்டுகளில் 4637 பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்களான பிகார், உத்தரப்பிரதேசத்தில் கூட பெண்களுக்கு எதிராக இவ்வளவு அதிக குற்றங்கள் நடைபெறவில்லை.


இவை தவிர கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுவாதி, நவீனா தொடங்கி அஸ்வினி வரை தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒருதலைக் காதலால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவை எல்லாம் பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் என்றால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக எண்ணிக்கையில் நடைபெறுகின்றன. இதற்குக் காரணம் மதுக் கொடுமை தான். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளைப் பின்தொடர்ந்து சென்றும், கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் வழியில் குழுவாக கூடியிருந்தும் மாணவிகளை கிண்டல் செய்வது, பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த முடியாததால் மாணவிகள் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நெருக்கடியும் ஏற்படுகிறது. இந்த நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும்; அது தான் அரசின் முதல் கடமையாக இருக்க வேண்டும்.


அதற்காக மகளிர் எந்தெந்த வகைகளில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதற்கான தீர்வுகள் என்ன? என்பதையும் வல்லுனர் குழு மூலம் ஆய்வு செய்து மகளிருக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த தனிக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு தனி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்; மகளிர் காவலர்களை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, மகளிருக்கு எதிரான குற்றங்களைகளைய தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.


இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.