ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் தேர்தல் ஆணையம் -திருமா!
ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்குத் துணை போவதா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் - தலைவர் திருமா வளவன் கேள்வி எழுப்பியுள்ளார்!
ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்குத் துணை போவதா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் - தலைவர் திருமா வளவன் கேள்வி எழுப்பியுள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., அடித்தட்டு மக்களுக்கும் அதிகாரம் மற்றும் ஜனநாயகம் பரவ வேண்டும் என்பதற்காகத்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைமுறையில் உள்ளது. ஆனால் அந்த நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் தற்போது தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பைத் செய்துள்ளது. நகர்ப்புற அமைப்புகளுக்குத் தேர்தலை அறிவிக்காமல் ஊரக அமைப்புகளுக்கு மட்டும் அறிவித்திருப்பது இதுவரை இல்லாத ஒரு புதுமையாக உள்ளது. ஆளுங்கட்சியின் இத்தகைய ஜனநாயக விரோதப்போக்கிற்குத் தமிழகத் தேர்தல் ஆணையம் துணைபோவது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் இப்போக்கிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியல் இனத்தவருக்கும், பழங்குடியினருக்கும், மகளிருக்கும்
2011-மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்; 13 ஆயிரத்துக்கும் மேலான துணைத்தலைவர் பதவிகளிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துத் தொடரப்பட்ட வழக்குகள் உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கும்போதே சட்டத்துக்குப் புறம்பாகத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டிருப்பது தமிழக அரசு நீதிமன்றங்களை மதிக்காத அரசு என்பதும் வெளிப்படையாகியுள்ளது.
தமிழக அரசின் இந்த அணுகுமுறையானது, உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்று ஆளுங்கட்சி திட்டமிட்டு செயல்படுவதாகவே தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டுக் கேட்டு தேர்தலைத் தள்ளிப்போட்டுவந்த தமிழக அரசு, தற்போது உச்சநீதிமன்றத்தின் நெருக்கடிக்குப் பின்னர் தவிர்க்க இயலாத நிலையில் தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பைச் செய்துள்ளது. ஆனால், அதற்கு யாராவது நீதிமன்றத்தில் தடையாணை பெறட்டும் என்கிற நோக்கில் இந்த அறிவிப்பைச் செய்துள்ளதாகத் தெரிகிறது.
அதிலும் ஊரக அமைப்புகளுக்கு மட்டுமே இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட நகர அமைப்புகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. தமிழக மக்களில் 50 விழுக்காட்டிற்கும் மேல் நகரப் பகுதிகளில் வாழுகின்றனர். தமிழ்நாட்டில் நகர அமைப்புகளுக்குத் தேர்தல் அறிவிக்காமல் காலம்தாழ்த்துவதில் உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. இது சரிபாதி மக்களுக்கு ஜனநாயகத்தை மறுப்பதாகும். இது எவ்வகையிலும் ஏற்புடையதாக இல்லை. இதற்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் எவ்வாறு இசைவு தெரிவித்தது என்பது வியப்பாக உள்ளது. இத்தகைய முறைகேடான தேர்தல் அறிவிப்புக்கு யாராவது நீதிமன்றத்தில் தடை வாங்கினால், எதிர்க்கட்சிகளின்மீது பழியைப் போடலாம் என்பதே ஆளுங்கட்சியின் திட்டமெனவும் தெரிகிறது.
இந்நிலையில், நீதிமன்றத்தில் எவரும் தடை ஆணையேதும் பெற வாய்ப்பில்லாத வகையில், பஞ்சாயத்ராஜ் மற்றும் நகர்பாலிகா சட்டப்படி, ஊரகம் மற்றும் நகர அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த முன்வரவேண்டுமென தமிழக அரசை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். என குறிப்பிட்டுள்ளார்.