டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். எனினும் அவரது கட்சிக்கு பொது சின்னம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.


முன்னதாக சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரன், தேர்தல் ஆணையம் ஒதுக்கிய குக்கர்  சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே அதே சின்னத்தையே தனது கட்சிக்கு பொது சின்னமாக ஒதுக்க வேண்டும் என டிடிவி கோரிக்கை விடுத்துள்ளார்.


இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே கைவிரித்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடினார் டிடிவி தினகரன்.


இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து, 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் வாதிட்டது. 


பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே பொது சின்னம் அளிக்க முடியும் எனவும், அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை பொது சின்னமாக கொடுக்க முடியாது எனவும் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் தெரிவித்தார்.


தேர்தல் ஆணையத்தின் இந்த வாதத்திற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடும் அதிருப்தி தெரிவித்தார். மேலும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.