எலக்ட்ரிக் ஸ்கூட்டரா? எமனின் வாகனமா?- சென்னையில் மீண்டும் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!
ஒரே வாரத்தில் 4-வது சம்பவமாக சென்னையில் மின்சார வாகனம் தீ பற்றி எரிந்தது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக கருதப்படும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு வரிச்சலுகை வழங்கி வருகிறது. ஆனால், மின்சார வாகனங்கள் அடுத்தடுத்து தீப்பற்றி எரிவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் சார்ஜ் போடப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டர் வெடித்ததில் தந்தையும்,13 வயதே ஆன அவரது மகளும் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வரிசையில் திருவள்ளூர், திருச்சி, சென்னை என தொடர்ச்சியாக மின்சார வாகனங்கள் தீப்பற்றி எரியும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் மீண்டும் ஒரு மின்சார வாகனம் இன்று தீப்பற்றி எரிந்தது. அம்பத்தூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் அதே பகுதியில் உள்ள தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் கணேஷ் திருவொற்றியூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
வழக்கம் போல் பணி முடிந்து இன்று மாலை தந்தையின் வாகனத்தில் கணேஷ் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். திருவொற்றியூர் - மணலி மாதவரம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவருடைய மின்சார வாகனத்தில் இருந்து வழக்கத்துக்கு மாறான சத்தம் வருவதை கேட்டு சாலையோரம் வண்டியை நிறுத்தியிருக்கிறார்.
மேலும் படிக்க | மின்சார வாகனங்கள் பற்றி எரிவதற்கான காரணம் என்ன?
அப்போது திடீரென புகை வந்த நிலையில் சில வினாடிகளில் மின்சார வாகனம் தீ பற்றி எரியத் தொடங்கியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கணேஷ் செய்வதறியாமல் திகைத்து நின்றுகொண்டிருந்தபோதே வாகனம் முழுவதும் தீயில் கருகி நாசமானது. அந்த நேரம் தமிழக குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான தண்ணீர் லாரி வந்ததையடுத்து அதனை நிறுத்தி எரிந்துகொண்டிருந்த வாகனத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ அணைக்கப்பட்டது.
இதனை அடுத்து கணேஷ் இந்த தகவலை தனது தந்தை பாலமுருகனுக்கு செல்போன் வாயிலாக தெரிவித்தார்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் மின்சார வாகனம் தீ பற்றி எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். தொடர்ச்சியாக அடுத்தடுத்து மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | பெட்ரோல், டீசல் வாகனம் Vs மின்சார வாகனம்.. ஒரு அலசல்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR