யானை காட்டை நம்பியுள்ளது. காடு யானைகளை நம்பியுள்ளது. காட்டின் நிலம் யானைகளுக்குரியது. சொந்த நிலத்தில் இருந்து யானைகள் உணவுக்காக மனிதர்களை நோக்கி வர வழைத்த தவறை மட்டும் நாம் செய்யவில்லை. அப்படி வரும் யானைகளை விதவிதமான முறையில் யானைகளை கொன்று குவிக்கிறது மனித இனம். 
2008-ம் ஆண்டு, பிப்ரவரி 4-ம் தேதி அதிகாலை ஈரோட்டிலிருந்து பாலக்காட்டை நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் ஒன்று அதிவேகத்தில் வந்துகொண்டிருந்தது. கோவை மாவட்டம் குரும்பப்பாளையம் அருகே உள்ள தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்த ஒரு பெண் யானை மற்றும் இரண்டு ஆண் யானைகளை தூக்கி வீசியது. இதில் யானைகள் அனைத்தும் பலியாகின. அதிலும் ஒரு யானை கர்ப்பிணி. அந்த கர்ப்பிணி யானையின் உடல் சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டது. உடல் உருக்குலைந்து, அதன் வயிற்றில் இருந்த 18 மாத ஆண் யானைக்குட்டி வெளியே விழுந்து இறந்தது. இந்த கோர சம்பவத்தை இன்றளவும் சுற்றுச்சுழூல் ஆர்வலர்கள் கண்ணீருடன் பதிவு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. தற்போதுவரை, ரயில்வே தண்டவாளங்களை கடக்கும் யானைகளின் உயிர்களை தொடர்ந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் காவு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | காட்டின் ‘பெரியவருக்கு’ உரிய மரியாதையைக் கொடுங்கள்.!


தண்டவாளங்கள் ஒரு பக்கம் யானைகளின் உயிரை பறிக்கிறது என்றால் மின் வேலிகள் இன்னொரு பக்கம் யானைகளின் உயிருக்கு உளைவைக்கிறது. பயிர்களை மேய்ந்துவிடக் கூடாது அல்லது காட்டில் இருந்து வெளியே யானைகள் ஊருக்குள் வரக்கூடாது என்று பாதுகாப்புக்கு போடப்படும் மின்வேலியில் சிக்கி எத்தனையோ யானைகள் பலியாகி வருகின்றன. இன்றளவும் அதுகுறித்த கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டாலும், இதைத் தடுப்பதற்கான நடவடிக்கையில்லை. இதையெல்லாம்விட கொடுமையானது அவுட்டுக்காய். சராசரியாக ஒரு நாளைக்கு 250 கிலோ உணவும், 200 லிட்டர் தண்ணீரும் ஒரு யானைக்குத் தேவைப்படுகிறது. ஆனால் அவுட்டுக்காய் எனப்படும் வெடிமருந்தை ஒரு யானை சாப்பிட்டால் அதன் வாய்ப்பகுதி கடுமையாக சிதையும். வாய் முழுக்க சிதைந்த புண்களோடு பசியில் அலையும். பசி எடுத்தாலும் உணவு சாப்பிட முடியாது. பசியும், பட்டினியுமாய் அலைந்து மெலிந்து யானை துடித்துச் சாகும். சமீபத்தில் வெடிமருந்து கலந்த அண்ணாச்சிப்பழத்தைச் சாப்பிட்ட கேரள கர்ப்பிணி யானை ஒன்று வாய் வெடித்து தண்ணீரில் நின்று உயிரிழந்த சம்பவம் அனைவரின் நெஞ்சையும் உலுக்கியது.  யானை மீதான மனித இனத்தின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 11 யானைகள் பலியாகி இருக்கின்றன. 



மேலும் படிக்க | யானைக்குப் பிடித்த ‘மதம்’ - 5 மணி நேரம் பாகன்கள் போராட்டம்


கோவை வனச்சரகத்தில் 3 யானை, போளுவாம்பட்டி வனச்சரகத்தில் 3 யானை, சிறுமுகை வனச்சரகத்தில் 2 யானை, வால்பாறை பகுதியில் 2 யானை, இயல் பகுதியில் 2 யானை, டாப்சிலிப் பகுதியில் ஒன்று என  மொத்தம் 11 யானைகள் கடந்த 3 மாதங்களில் பலியாகியுள்ளன. இதில் பெருமளவு யானைகள் இளம் வயதுடையவை. அதேபோல் இயற்கைக்கு முரணாக மின்வேலியில் சிக்கி ஒரு ஆண் யானையும், அவுட்டுகள் கடித்து பத்து வயது பெண் யானையும் பலியாகியுள்ளன. இந்நிலையில், தமிழக வனத்துறை சார்பில் யானை உயிரிழப்பு குறித்து கண்காணிக்கத்  தனியாக கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் தலைமையில், செயல் திட்ட அலுவலர் பத்மா, துணை வனப்பாதுகாவலர் சமர்தா மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஓசை காளிதாசன் ஆகிய 4 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் தமிழகம் முழுவதும் இயற்கைக்கு முரணாக யானைகள் உயிர் இறக்கும் போது நேரடியாக களத்திற்கு சென்று உயிரிழப்பிற்கு காரணம், உண்மை களநிலவரங்களை பதிவு செய்ய உள்ளனர். அதேபோல் வனப்பகுதி ஒட்டியுள்ள கிராமங்களில் நேரில் சென்று இயற்கைக்கு முரணாக யானைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் விழிப்புணர்வையும் ஏற்படுத்த உள்ளனர். 


மேலும் படிக்க | ஒரு புலியைப் பிடிக்க இவ்வளவு செலவா.! T23 புலி வைத்த வேட்டு..


இந்த சிறப்புக் குழு, முதல் கட்டமாக கோவை தாணிக்கண்டி வனப்பகுதியில்  அவுட்டுகாய் வெடித்ததில் பெண் குட்டியானை உயிரிழந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் போது யானை எந்த பகுதியில் காயங்களுடன் கண்டறியப்பட்டது, சிகிச்சை முறை,  மேலும் சுற்றுவட்டார கிராமங்களில் அவுட்டு காய் போன்ற வெடிபொருட்கள் சோதனை நடத்தப்படுகிறதா என்பது குறித்தெல்லாம் விசாரித்தனர். மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு யானை பலிக்கான காரணங்கள் குறித்த அறிக்கையை இக்குழு சமர்ப்பிக்க உள்ளது. இந்த ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், கால்நடை மருத்துவர் சுகுமாரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



தமிழக அரசின் இந்த முயற்சி வரவேற்க கூடியதாக இருந்தாலும், காடுகளின் ஆக்கிரமிப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. தனது சொந்த நிலத்தில் இருந்து துரத்திவிடப்படும் யானைகளின் பக்கம் இருப்பதே ஓர் ஜனநாயக ரீதியான அரசுக்கான அறம்.! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR