காடுகளின் அரசன் என வர்ணிக்கப்படும் யானையின் நிலை தற்போது மிகுந்த பரிதாபத்துக்குரியதாக மாறிவிட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து உணவுக்காக ஊருக்குள் இறங்கி வரும் யானைகளைக் கத்தி, வேல்கம்பு கொண்டு மனித இனம் துரத்தி வருகிறது. மேலும், மின்சார வேலிகளைப் பொருத்தி யானைகளைக் கொல்வது, அவுட்டுக்காய் வைத்து யானைகளை நாசமாக்குவது என யானைகள் மீதான மனித இனத்தின் வெறுப்புச் செயல்கள் அதிகரித்திருக்கின்றன. தந்தத்திற்காக வேட்டையாடப்படுவது, ரயில்வே ட்ராக்கில் அடிக்கடி விபத்தில் சிக்குவது, சாலைகளில் வாகனங்களால் ஹாரன் அடிக்கப்பட்டு துன்புறுத்தப்படுவது என நாளுக்குநாள் யானைகள் மீதான கொடுமைகளை மனித இனம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
பயிர்களை சேதப்படுத்தும் யானைகளை, ‘யானைகள் அட்டகாசம்’, ‘யானைகள் செய்த அட்டூழியம்’ போன்ற பொதுச்சொற்களை சில ஊடகங்களும் பயன்படுத்துகின்றன. இதனால் பொதுச்சமூகத்தில் யானைகள் மீதான பிம்பம் மேலும் மோசமடையும் சூழல் உருவாகி வருகிறது. இதுமட்டுமல்லாமல், காட்டிற்குள் வாகனங்களை துரத்தும் யானைகள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரப்பப்படுகின்றன. இதனை காணும் வளரும் குழந்தைகள், யானையை ஒரு மோசமான மிருகமாக கட்டமைத்துக் கொள்ளும் ஆபத்துகளும் நிகழ்கிறது. விலங்குகளுடனான மனித இனத்தின் சண்டை மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டும் காலத்துக்கு வந்துள்ளோம் என்று தோன்றும் அளவுக்கு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மேலும் படிக்க | யானை தந்தம் ஏன் மிகவும் விலை உயர்ந்தது? கோடிகள் கொடுக்கப்படுவது ஏன்?
கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் மனித இனத்தால் பல யானைகள் பலியாகி இருக்கின்றன. தற்போது மேலும் ஒரு துயரமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் முள்ளாங்காடு தாணிக்கண்டி வனப்பகுதியில் உடல் நல குறைவால் 8 வயதே ஆன குட்டி பெண் யானை ஒன்று சுற்றித்திரிந்துள்ளது. அங்குமிங்கும் மந்தமாக சுற்றித்திரிந்த அந்த பெண் குட்டி யானை, சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், தொடர்ந்து குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். உடல்நலக்குறைவாக உள்ள யானையை கால்நடை மருத்துவர்கள் குழு மற்றும் வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்திப் பிடித்து, சிகிச்சை மேற்கொண்டனர். அப்போது, யானையின் வாய் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டு மருத்துவக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். கிட்டத்தட்ட 90 சதவீதம் குட்டி யானையின் நாக்கு அறுபட்டுக் கிடந்துள்ளது.
இதனால் தான் சாப்பிடவே முடியாமல் கடந்த சில நாட்களாக அந்த குட்டி யானை சுற்றித்திரிந்துள்ளது. யானையின் வாய்ப்பகுதி இப்படி பாதிக்கப்பட்டிருப்பது காரணம், அது அவுட்டுக்காயை கடித்திருக்கலாம் என்று மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விளைப்பயிர்களை மேயக்கூடாது என்று சிலர் அவுட்டுக்காயை வைக்கின்றனர். இதனை சாப்பிடும் யானைகள் பரிதாபமாக உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வலி நிவாரணி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் மருந்துகள் கொடுக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் ஈடுபட்டும், எந்தப் பலனும் இல்லை. எட்டு வயதான அந்தக் குட்டியானை பரிதாபமாக உயிரிழந்தது. யானைகளின் வலசைப் பாதை அழிப்பு, வனச்சூழல், பருவ நிலை மாற்றம் குறித்த மிகத் தீவிரமான உரையாடல்களுக்கு மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இப்போதும் மேற்குத்தொடர்ச்சி மலையில் வசிக்கும் பழங்குடி மக்கள் யானையை மிகுந்த மரியாதையோடு ‘பெரியவர்’ என்றே அழைக்கிறார்கள். ஒரு காட்டின் ‘பெரியவரை’ காப்பது அரசின் தலையாய கடமை இல்லையா ?!
மேலும் படிக்க | தண்டவாளத்தை கடக்க முயலும் யானை கூட்டங்களின் திக் திக் நிமிடங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR