தமிழகத்தில் கொரோனா மரணங்களுக்கு முற்றுப்புள்ளி - சாதித்த மருத்துவத்துறை
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட யாரும் உயிரிழக்காததால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் கொரோனா மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்டார். அடுத்த சில நாட்களில் சீனாவை முடக்கிய இந்த பெருந்தொற்று பிறகு மெல்ல மெல்ல உலகின் பிற நாடுகளையும் ஸ்தம்பிக்க வைத்தது. ஏழை, பணக்காரர் என வித்தியாசம் பார்க்காமல் அனைத்து தரப்பினரின் வாழ்வாதாரத்தையும் சீர்குலைத்த இந்த பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வருமோ என மனிதகுலம் ஏங்காத நாட்களில்லை. இந்தியாவில் மூன்று அலைகள் வீசி ஓய்ந்தாலும் சில நாடுகளில் நான்கு அலைகள் வீசின. இந்த நிலையில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு நிகழாத தினத்தை கடந்துள்ளது தமிழ்நாடு.
மேலும் படிக்க | கவனம்! நான்காவது அலை மிக விரைவில் வரப்போகிறது
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம், முதல் உயிரிழப்பு பதிவானது. இது அடுத்தடுத்த நாட்களில் உச்சம் தொட்டு ஆகஸ்ட் மாதத்தில் 3,387 எனும் எண்ணிக்கையை அடைந்தது. இதன் பிறகு கொரோனா முதல் அலை சற்றே ஓய்ந்த நிலையில், 2021-ம் ஆண்டு ஏப்ரம் மாதம் இந்தியாவில் இரண்டாம் அலை சுழன்றடித்தது. முதல் அலையின் போது தொற்று பாதிப்புகள் அதிகம் இருந்தாலும் உயிரிழப்பு குறைவாகவே இருந்ததால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் உயிர்சேதம் குறைவாகவே பதிவானது.
ஆனால், அதுவரை இல்லாத வகையில் 2021 மார்ச் மாதம் கொரோனா மரணங்கள் உச்சம் தொட்டன. இதே ஆண்டு மே மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10,186 பேர் உயிரிழந்தனர். இந்த கால கட்டத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக அரியணையில் திமுக அமர்ந்தது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற மா.சுப்பிரமணியன் மற்றும் ஆட்சி மாறினாலும் அதே துறையின் செயலாளராக தொடர்ந்த ராதாகிருஷ்ணன் IAS ஆகியோரின் கடும் முயற்சியின் பலனாக தமிழகத்தில் கொரோனா பரவல் விகிதம் படிப்படியாக குறைந்துகொண்டே வந்தது.
மேலும் படிக்க | கொரோனா ஒழிந்து விட்டது என நினைப்பது மிகப்பெரிய தவறாக இருக்கும்: ஐநா
இந்நிலையில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 24 மணி நேரத்தில்(11-03-2022) தமிழகத்தில் கொரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 112 ஆக குறைந்து, சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 1,461 ஆக சரிந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு பின் கொரோனா உயிரிழப்பு இல்லாத நாளை தமிழகம் எட்டியுள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், இரவு பகலாக உயிரை பணையம் வைத்து பணியாற்றிய மருத்துவ பணியாளர்களும், தூய்மை பணியாளர்களுமே இந்த சாதனையின் நிஜ நாயகர்கள் என்றால் அது மிகையல்ல.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR