தமிழ்நாடு அரசு துறைகளின்கீழ் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு முழுவதும், GROUP-8 தேர்வு கடந்த செப். 11ஆம் தேதி நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தேர்வு திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் உள்ள தேர்வு மையத்திலும் நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை நடைபெற்ற தேர்வில், தேர்வர்கள் காலை 9 மணிக்கு தேர்வறையில் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. 9 மணிக்கு கேள்வித்தாள் வழங்கப்பட்டு, 9 மணி முதல் 9.30 மணி வரை தேர்வர்கள் கேள்வித்தாளை படித்து பார்க்க நேரம் கொடுக்கப்பட்டது. 


மேலும் படிக்க | கனியாமூர்: கலவரத்தால் சீர்குலைந்த பள்ளியின் சீரமைப்பு பணிகள் தொடக்கம்



சிறுநீர் கழிக்க அனுமதி மறுப்பு


9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். பின் விடைத்தாளை வழங்கிவிட்டு மதியம் 12.45 மணிக்குதான் தேர்வாளர்கள் வெளியே செல்ல வேண்டும் என்பது விதிமுறையாகும். காவேரி கல்லூரியில் தேர்வு நடைபெற்ற போது, அங்கு தேர்வெழுதிய பெண் ஒருவர் காலை 11.30 மணியளவில், அதாவது தேர்வறைக்கு சென்றதில் இருந்து சுமார் இரண்டரை மணி நேரம் கழித்து, சிறுநீர் கழிக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட தேர்வு அறையின் கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்டுள்ளார்.


அதற்கு அந்த கண்காணிப்பாளர், 'வெளியில் போகக்கூடாது, அடக்கி கொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார். இத்தனைக்கும் அந்த கண்காணிப்பாளரும் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருகட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல், அந்த பெண் தேர்வர் 12 மணியளவில் மீண்டும் சிறுநீர் கழிக்க அனுமதிக்குமாறு கண்காணிப்பாளரிடம் கெஞ்சியுள்ளார்.


'புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்'


அப்போது இன்னும் சிறிது நேரம்தான், கொஞ்சம் கட்டுப்படுத்துங்கள் என்று மீண்டும் கண்காணிப்பாளர் கூறியுள்ளார். சுமார் 10 நிமிடங்கள் கேட்டுபார்த்தும் அனுமதிக்காததால், பொறுமையிழந்த அந்தப் பெண், 'என்னை வெளியில் விடுங்கள். என்னுடைய தேர்வுத்தாளை வாங்காவிட்டாலும் கூட பரவாயில்லை' என கூறிவிட்டு, கழிவறைக்கு செல்ல முயற்சித்துள்ளார். அப்போது அந்த கண்காணிப்பாளர், அந்த பெண்ணின் கையை பிடித்துக்கொண்டு, வெளியே செல்ல அனுமதி மறுத்துள்ளார். 'நான் ஒன்னும் பிட் அடிக்க போகவில்லை, மேடம். புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்' என அந்த பெண் கெஞ்சியபோது, மேல் அதிகாரியிடம் கேட்டுச்சொல்கிறேன் என மீண்டும் 5 நிமிடம் காக்க வைத்துள்ளார்.


 


ஆனால், அவர் யாரிடமும்  அதுகுறித்து பேசவில்லை என கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் கண்காணிப்பாளர் எந்த பதிலும் அளிக்காததால், பொறுமை இழந்து இதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாது என்ற சூழலில் கண்காணிப்பாளரின் கையை உதறிவிட்டு, அந்த பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். மேலும், அந்த பெண் கழிவறையை பயன்படுத்திவிட்டு வெளியே வந்தபோது, மற்றொரு பெண் கண்காணிப்பாளருடன், சம்பந்தப்பட்ட பெண் கண்காணிப்பாளரும் கழிவறை வாசலில் காத்துக்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. 


'அப்படி எந்த உத்தரவும் இல்லை'


அடிப்படை மனிதத்தன்மையும், உரிய நடைமுறைகளும் தெரியாத தேர்வு கண்காணிப்பாளர்களை நியமிப்பதே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என  சொல்லப்படுகிறது. ஏறத்தாழ, மூன்றே முக்கால் மணிநேரம் தேர்வறைக்குள் உட்கார்ந்து இருக்க வேண்டிய நிலையில், இயற்கை உபாதைக்கு கூட வெளியே செல்லக்கூடாது என்பது மனிதத்தன்மையற்ற செயலாக பார்க்கப்படுகிறது. 


இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி ஐஏஎஸ்-ஐ நாம் தொடர்புகொண்டு கேட்டபோது,'இயற்கை உபாதைகள் கழிக்க தேர்வர்களை வெளியே அனுப்பக் கூடாது என எந்த உத்தரவோ,அறிவுறுத்தல்களோ இல்லை. இதுபோன்ற தர்மசங்கடங்கள், எதிர்காலத்தில் எந்த தேர்வருக்கும் ஏற்படாத வகையில் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்' என்றும் தெரிவித்தார்.



நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவியரின் தாலியை கழட்ட சொன்ன போதும், மூக்குத்தி, கம்மலை கழட்ட சொன்ன போதும் மத்திய அரசை திட்டித் தீர்த்த அதே தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில், பெண் தேர்வரை சிறுநீர் கழிக்க அனுமதிக்க மறுத்த மிருகத்தனமான செயல் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | NEET Exam Dress Code : கேரளாவில் பகீர்! மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன அதிகாரிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ