கருத்து கணிப்புகளை விட மக்களின் கணிப்பே எங்களுக்கு முக்கியம்: ஸ்டாலின்
கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும், மக்களுடைய கணிப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றோம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: கடந்த மாதம் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்ற 2019 மக்களவை தேர்தல் தேர்தல் நேற்றுடன் (மே 19) முடிந்தது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுயை தவிர மற்ற 38 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18-ஆம் நாள் நடைப்பெற்றது.
நேற்றுடன் மக்களவை தேர்தல் நடந்து முடிந்து விட்டதால், அனைத்து ஊடகங்களும் கருத்து கணிப்புகளை வெளியிட்டன. நாடு ழுமுவதும் பாஜக-வின் கை ஓங்கி இருந்தாலும் தமிழகத்தில் பாஜக-வின் கை ஓங்கவில்லை என்பதை கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன.
38 தொகுதிகளில் பாஜக இடம் பெற்றுள்ள அதிமுக கூட்டணிக்கு 6 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், காங்கிரஸ் இடம்பெற்றுள்ள திமுக கூட்டணிக்கு 31 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகளை குறித்து பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியது, “ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும், இல்லையென்றாலும் நாங்கள் அதையெல்லாம் பொருட்படுத்துவதுமில்லை, ஏற்றுக்கொள்வதுமில்லை; மக்களுடைய கணிப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றோம்”