சென்னை சென்ட்ரலில் விவசாயிகள் மீண்டும் போராட்டம்
தமிழக விவசாயிகள் கடந்த சில நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தி வந்தனர்.
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் சுமார் 250 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் முடிவு கிடைக்காவிட்டால் மே 25-ம் தேதி முதல் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என விவசாயி சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு தெரிவித்தார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில், போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகள், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை சென்னை வந்து சேர்ந்தனர்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு, டெல்லியில் போராட்டம் நடத்திய போது கொலை வழக்கு போடுவோம் என மிரட்டல்கள் வந்தன. கோரிக்கைகளை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுப்பதாக, பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார். தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவால் 15 நாட்களில் முடிவு சொல்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முடிவு கிடைக்காவிட்டால் மே 25 முதல் டில்லியில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும். பிரதமர் மோடி பார்க்க மறுத்ததால் தான் அவரது அலுவலகம் முன்பு நிர்வாண போராட்டம் நடந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டெல்லியிலிருந்து சென்னை சென்ட்ரல் வந்திறங்கிய விவசாயில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே மத்திய அரசு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.