நாளை பரிசீலனை!! தமிழகம் புதுவையில் நிறைவடைந்தது வேட்புமனு தாக்கல்
வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட 97 தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்தது.
தமிழகத்தின் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதே சமயம் தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
அதேபோல இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டத்தில் தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அந்த 97 தொகுதிகளுக்கும், தமிழகத்தில் உள்ள 18 தொகுதிக்கான (இடைத்தேர்தல்) வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 அன்று தொடங்கியது. மொத்தம் ஆறு நாட்கள் நடைபெற்ற வேட்புமனு தாக்குதலில் கடைசி இரண்டு நாள் சூடுபிடித்தது.
இன்று பிற்பகல் 3 மணியுடன் மனுதாக்கல் முடிந்தது. நாளை மார்ச் 27 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுத் திரும்ப பெரும் கடைசி நாள் மார்ச் 29 ஆகும். அன்றே இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும்.
மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்க்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.