முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு நாளை விடுதலை!!
முன்னாள் நீதிபதி கர்ணண் கொல்கத்தா சிறையிலிருந்து நாளை விடுதலை ஆகிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ்.கர்ணன் சென்னை, கொல்கத்தா ஆகிய உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பணியாற்றிய போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோருக்கு எதிராக ஊழல் புகார்களைத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அவரது நடவடிக்கையை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாலும், அரசியல் சாசன அமர்வு உத்தரவின்படி மன நலப் பரிசோதனைக்கு உடன்பட மறுத்ததாலும், நீதிபதியாக இருந்த கர்ணனின் செயலை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி அவரைக் கைது செய்து ஆறு மாதங்களுக்கு சிறையில் வைக்க உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த கர்ணனை, கோவையில் தங்கியிருந்த போது, தமிழக காவல்துறை உதவியுடன் மேற்கு வங்க காவல்துறையின் தனிப் படையினர் கடந்த ஜூலை 20-ஆம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தண்டனை காலம் முடிவடைவதால் நாளை நீதிபதி கர்ணன் விடுதலை செய்யப்படுகிறார்.