அமைச்சர் எ.வ.வேலு மக்களுக்கு கிலுகிலுப்பை காட்டி ஏமாற்றுகிறார்: ஜெயக்குமார்
அமைச்சர் எ.வ.வேலு மக்களுக்கு கிலுகிலுப்பை காட்டி ஏமாற்றுகிறார் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது., சென்னையில் எங்குப் பார்த்தாலும் குண்டு குழியுமான சாலைகள்,அது மட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பருவ மழையை எதிர்நோக்குகின்ற சூழ்நிலையில் கூட்டங்களைப் போட்டு,மாநகராட்சியை முடுக்கிவிட்டு, குடிநீர் வாரியத்தை முடுக்கிவிட்டு, மின்துறை, வருவாய்த்துறை போன்றவற்றை முடுக்கிவிட்டு, மழைக்காலத்திற்கு முன்பாக செய்யவேண்டுமே அதனைச் செய்யத் தவறிய சூழ்நிலையில், ஒரு லேசான மழைக்கும்கூட, ராயபுரம் மட்டுமல்ல சென்னையில் பல இடங்களில் மேசமான நிலை உள்ளது. கேட்டால் 1700 கிலோ மீட்டர் அளவில் நாங்கள் பணி செய்கிறோம் என்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட கால கட்டத்தில் செய்து முடிக்க வேண்டுமா இல்லையா. சென்னையில் எங்குத் திரும்பினாலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. லேசான மழை பெய்தாலும் கூட தற்போது நடைபெற்றுவரும் பணிகளால் மீண்டும் அதே மணல் உள்ளே சென்றுவிடும் நிலை உள்ளது. இதனைத் துரிதமாக அப்புறப்படுத்த வேண்டும். உடனே மூட வேண்டும். கால்வாய் பணிகள் நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், வேறு வழிகளில் செல்லவும் வழி வகையைச் செய்யவில்லை.
ராயபுரம் தொகுதியில் அம்மாவின் ஆசியோடு 25 வரும் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். ஆனால் இவர்கள் செய்யும் பணியால் தற்போது கால்வாய் தண்ணீரில் நடந்துவரும் நிலை உள்ளது. ராமதாஸ் நகர், 600 கோடிக்கு மேல் நிதியை ஒதுக்கீடு செய்து 1500 பேருக்கு வீடுகளைக் கட்டி தந்துள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்து 15 மாதம் ஆகிவிட்டது. இதனைத் திறக்கவேண்டும் என்று நினைத்திருந்தால் திறந்திருக்கலாம். உடனடியாக திறந்தால் அம்மாவின் அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும். இதற்காக இதனை மூடுவிழா செய்துவிட்டார்கள். எங்களுக்கு நல்ல பெயர் வந்துவிடும் அதனால் மக்களைப் பழிவாங்கவேண்டும் என்ற வகையில் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள். இதனைத் திறப்பதற்கு என்ன பிரச்சனை உள்ளது. குடிநீர் இணைப்பு மற்றும் மின் இணைப்பைத் தரவேண்டும் அவ்வளவுதான். அற்புதமாக இந்த அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டி முடித்திருந்த போதிலும் இந்த விடியா அரசு இதனைத் திறக்கவில்லை. இந்த தொகுதியைப் பொறுத்தவரையில் பெயருக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார்.
மேலும் படிக்க | அரசு விழாக்கள் பொழுதுபோக்கு அல்ல - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சம்பளத்தை வாங்கிக்கொள்கிறாரே தவிர வேறு எந்த வேலையும் செய்வதில்லை. வாக்கு கேட்பதற்கு மட்டும் வந்தாரே தவிர மற்ற நாட்களில் வரவில்லை. இன்றும் நேரடியாகச் சவால் விட்டுச் சொல்கிறேன். இந்த பகுதிக்கு வரட்டும் பார்க்கலாம். இன்றைக்கும் நல்லதிற்கும், கெட்டதிற்கும் வருவது நாங்கள் மட்டும்தான். சட்டமன்ற உறுப்பினர் யார் என்றுகூடத் தெரியாத நிலை உள்ளது. சட்டமன்றத்தில் சென்று சம்பளம் வாங்குவதற்கும், தன்னுடைய வியாபாரத்தைப் பெருக்குகின்ற அடிப்படையில்தான் இன்றைக்குச் சட்டமன்ற உறுப்பினர் இருக்கின்றாரே தவிர நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு.
கேள்வி : நீங்கதான் 10 வருடமாக ஆட்சி இருந்தீர்கள்.
பதில் : நாங்கள் அனைத்து பணிகளையும் செய்தோம். ஆனால் இவர்கள் அதனைச் சரியாக பாராமரிப்பு செய்யவில்லை. அதுதான் முக்கியம். பாராமரிப்பு செய்யவில்லை என்றால் அது யார் தவறு. கழிவு நீர் கால்வாய் உள்ளது. அதனைச் சரியான முறையில் தூர்வாரியிருந்தால் தண்ணீர் தானாகச் சென்றிருக்கும். இது யார் தவறு. நாங்களா 16 மாதம் ஆட்சியில் இருக்கிறோம். சாலையைப் போட்டுத் தந்தோம். மழையில் குண்டு குழியும் அவ்வப்போது ஏற்படும். உடனே அதனை அடைத்துவிடுவோம். ஆனால் தற்போது குண்டும், குழியும் இருந்தால் அதனை மூடவேண்டிய பொறுப்பு இவர்களுடையது. இதுதான் பாராமரிப்பு பணி என்பது. பாராமரிப்பு கிடையாது. தொலைநோக்கு பார்வை கிடையாது. மக்கள் குறித்து அக்கறை கிடையாது. இதனால்தான் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது,இதே பகுதியில் பெரு மழை பெய்யும்போது பாருங்கள் இடுப்பளவு தண்ணீர் நிற்கும். நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போது இதுபோன்ற நிலைமை இல்லை. முழுமையாகத் தண்ணீர் வடிந்துவிடும். அப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இதுபோல கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப் படாமல் உள்ளது பெயருக்குதான் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இன்றைக்கு மக்கள் பணி செய்துகொண்டிருப்பது கழகத்தைச் சேர்ந்த நாங்கள்தான். இன்றைக்கும் ஒரு குழந்தையிடம் சென்று கேளுங்கள். இந்த தொகுதியின் எம்ஏல்ஏ யார் என்று ஜெயகுமார் என்றுதான் சொல்லும்.
மேலும் படிக்க | வானிலை எச்சரிக்கை: தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் கனமழை
கேள்வி : ராயபுரத்தை ராயல்புரமாக மாற்றுவேன் என்று தெரிவித்தார். நீங்களே தண்ணீரில் நடந்துவரும் நிலைமைதான் திராவிட மாடல் ஆட்சியா
பதில் : இதுதான் திராவிட மாடல். திராவிட மாடல் என்றால் முழுக்க முழுக்க சட்டம் ஒழுங்கை மோசமாக்குவது, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது, கட்ட பஞ்சாயத்துகளில் ஈடுபடுவது, கொலை, கொள்ளை மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்குவது கமிஷன், கரேப்ஷன், கமிஷன். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித் தராமல் இருப்பது, இதுபோன்ற விஷயங்களில் முன் மாதிரியாக இருப்பதுதான் திராவிட மாடல்.
கேள்வி : நிதி அமைச்சர் மீது செருப்பு வீசப்பட்டது தொடர்பாக அண்ணாமலையின் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வலம் வந்துகொண்டுள்ளதே
பதில் : இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே நான் பதில் அளித்துள்ளேன். செருப்பு வீசியதும் தவறு, அதற்கு முன்னர் நடைபெற்ற சம்பவமும் காரணம். நிதி அமைச்சர் உங்களுக்குத் தகுதி இருக்கா என்று கேட்க வேண்டிய அவசியம் இல்லையே. இதுபோன்ற வார்த்தையைக் கேட்கலாமா. எனவே இரண்டு தரப்பினர் மீதும் தவறு உள்ளது. இங்கு வருவதற்குத் தகுதி இருக்கா என்று கேட்டது தவறு. அதன் காரணமாகச் செருப்பு வீசியதும் தவறு. ஆடியோ பொறுத்தவரையில் இதனை உறுதிப் படுத்தாமல் கருத்து தெரிவிக்க முடியாது.
கேள்வி : இதுபோன்று நீங்கள்பேசக்கூடாது என்று நிதி அமைச்சருக்கு உச்சநீதிமன்ற நீதிபதியே கூறியுள்ளாரே
பதில் : முந்திரிக்கொட்டை தனத்திற்கு சரியான ஒரு கொட்டு கொட்டியுள்ளார். நீங்கள் புத்திசாலி என்று நினைக்காதீர்கள். உங்களைப் பற்றித் தெரியும் என்று தெரிவித்துள்ளார். இலவசங்களைப் பொறுத்தவரையில் நமது மாநிலத்தின் நிலைமையைப் பார்க்கவேண்டும். நம்முடைய மாநிலம் 1921லிருந்து முதல் அரசாரணை போடப்பட்டு, அதாவது இடஒதுக்கீட்டிலிருந்து,ஒடுக்கப்பட்டவர்கள்,ஆதி திராவிடர்கள்,பின்தங்கியவர்கள் இப்படி அனைத்து தரப்பு மக்களைக் கைதூக்கிவிடுகின்ற அரசு என்கின்ற வகையில் பல திட்டங்களை ஆதிகாலத்திலிருந்து கொண்டுவந்துள்ளோம். அண்ணா காலத்தில் ரூபாய்க்கு படி அரிசி திட்டம். மூன்று வேளைகள் ஏழை எளிய மக்கள் சாப்பிடவேண்டும் என்று கொண்டுவரப்பட்டது.இதனைத் தவறு என்று சொல்லக்கூடாது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம். இந்தியாவிலேயே எங்கும் கிடையாது. அப்போது மின்சாரத்தையே வீட்டில் பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு குடிசைக்கு ஒரு விளக்கு இலவசம் என்று இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல் முதலாக கொண்டுவந்தார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். கிராமங்களுக்குப் பேருந்து வசதியை அளித்தார். சத்துணவுத் திட்டம். கர்ப்பிணிப் பெண்களுக்குச் சத்துணவுத் திட்டம்.இதனால் இறப்பு விகிதம் குறைந்தது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இலவசம் என்பதை மாற்றி விலையில்லா என்று அழகான பெயரை வைத்தார். விலையில்லா மிதிவண்டி,விலையில்லா மடிகணினி,தாலிக்குத் தங்கம் போன்ற பல்வேறு சமூக திட்டங்களைக் கொண்டுவந்தார். இந்த விடியா அரசு தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டது. 25 ஆயிரம் தருவதற்குப் பதில் ஆயிரம் தருகிறார்கள். 50 ஆயிரத்திற்கு பதில் ஆயிரம் தருகிறார்கள். மக்களின் நாடி துடிப்பை பிடித்து பார்த்து அதன் அடிப்படையில் திட்டங்களை வகுப்பவர்தான் மாபெரும் தலைவராக உருவெடுக்க முடியும். அந்த வகையில்தான் அண்ணா,புரட்சித்தலைவர்,புரட்சித்தலைவி அம்மா நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தார்கள். இந்த திட்டங்கள் இன்றும் தமிழக மக்களால் பேசப்படுகிறது, கொரோனா சமயத்தில் மடிக்கணினி எந்த அளவுக்குப் பயன்பட்டது. அம்மாவுக்குத் தெரியுமா கொரோனா வரும் என்று தெரியாது. மாணவர்களுக்கு அளித்த மடிக்கணினி அந்த சமயத்தில் பயன்பட்டது. அதன் மூலம் கல்வியைப் பயின்றார்கள். இதுபோன்ற திட்டங்கள் நமக்கு வேண்டும். விலையில்லா திட்டங்கள் வேண்டும். ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இலவச டிவி அளித்தார்கள்.இது தேவையா. இவர்கள் ஏன் டிவி அளித்தார்கள். இவர்களின் கேபிள் டிவி நெட். இதில் இவர்களின் சேனலை பார்ப்பதற்காக ஒரு டிவியை கொண்டுவந்து இதற்காகப் பணத்தைச் செலவு செய்தார்கள். இவை அனைத்தும் ஊதாரி திட்டங்கள். சமூக நிலை,கல்வி நிலை ஏற்றங்களைக் கொண்டுவருவதுபோன்ற திட்டங்களைக் கொண்டுவந்தால் அதனைத் தவறு என்று சொல்ல முடியாது. இந்த இலவசங்கள் குறித்து தான்தோன்றித் தனமாக ,வாய்க்கு வந்தபடி பேசினால் ஏற்றுக்கொள்வார்களா. அதற்காகதான் உச்சநீதிமன்றம் சரியான குட்டு வைத்துள்ளது.
கேள்வி: எதிர்க்கட்சிதலைவர் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அறிக்கை வெளியிட்டபோது அதற்கு டிஜிபி விளக்கம் அளித்து வெளியிட்டுள்ளாரே
பதில்: அது மெட்டைக் கடிதாசி. அதில் ஏதாவது டிஜிபி அலுவலகம் என்று சீல் உள்ளதா. போலீஸ் சின்னம் ஏதாவது அதில் இருந்ததா. அந்த மெட்டைக் கடிதாசியில் 12 கொலை இல்லை 12 கொலைதான் என்று இருக்கிறது. அப்படி என்றால் 12 கொலை உங்களுக்குக் கொலையாகத் தெரியவில்லையா. எதிர்க்கட்சி தலைவர் ஆக்கபூவர்மாக அரசை நெறிபடுத்தி அறிக்கை வெளியிடும்போது,இதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என்ற வார்த்தை உள்ளதா.இல்லையே. எதிர்க்கட்சியை ஒரு மெட்டைக் கடிதாசி மூலம் குற்றம் செல்வது, இன்றைக்குச் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது. ரயிலில் பெண் காவலருக்கு வெட்டு விழுகிறது. நெல்லையில் காவல் காத்துக்கொண்டிருந்த காவல் ஆய்வாளரைக் கழுத்தில் வெட்டிவிட்டார்கள். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உதவியாளர் பணியில் இருக்கும் காவலரை அடிக்கிறார். காவல்துறையின் நிலைமை இதுபோல உள்ளது. புரட்சித்தலைவர் காலத்திலும்,அம்மா காலத்திலும் ஸ்கலாண்டு காவல்துறைக்கு இணையாக இருந்த காவல்துறை இன்றைக்குக் கூனி குறுகிப்போய் ஸ்டாலின் மற்றும் அவர்களின் குடும்பத்தின் ஏவல்துறையாக மாறியுள்ளது. ஆந்திராவில் மாமனாரைக் கவிழ்த்துவிட்டு மருமகன் ஆட்சிக்கு வந்தார். என்டி ராமராவை கவிழ்த்துவிட்டு சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்தார்.அதுபோல இவர்களுக்குப் பஞ்சாயத்து செய்வதற்கே ஸ்டாலினுக்கு நேரம் சரியாக உள்ளது. ஒரு பக்கம் உதயநிதி,ஒரு பக்கம் சபரீசன். ஒரு பக்கம் மற்ற சொந்தக்காரர்கள். இப்படி இவர்களைச் சமாதானம் செய்வதற்கே நேரம் சரியாக உள்ளது. அனைத்தையும் தாண்டி மாமனாரைக் கவிழ்த்துவிட்டு மருமகன் ஆட்சிக்கு வரப்போகிறார். ஆந்திராவைப்போல இங்கும் கண்டிப்பாக நடக்கும்.
கேள்வி: பரந்தூர் விமான நிலையம் தொடர்பாகப் பேசிய அமைச்சர் ஏ.வ,வேலு நாங்கள் எட்டுவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளாரே
பதில்: திமுக சந்தர்ப்பவாத கட்சி. ஆரம்பக் காலம் முதல் இதுபோல நடக்கிறது. எட்டுவழிச் சாலை திட்டம் நல்ல திட்டம். 10 ஆயிரம் கோடிக்கான திட்டம். சேலம் செல்வது என்றால் 50 கிலோமீட்டரை மிச்சம் செய்யலாம். எட்டுவழிச் சாலை ஓரமாக இருப்பவர்களின் வீடுகள் பாதிக்கப்பட்டாலே,அவர்களுடைய தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டாலே ,மாமரம் பாதிக்கப்பட்டாலே,ஒரு மாமரத்திற்கு 40 ஆயிரம். தென்னை மரத்திற்கு 35 ஆயிரம்,வீடுகள் மாற்றினால் வீடுகளைக் கட்டி தருகிறோம்,நிலத்திற்குப் பன்மடங்கு விலை தருகிறோம் என்று தெரிவித்தோம். அப்போது இவர்கள் எட்டுவழி சாலையை அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னார்கள். பச்சை துண்டை கட்டிக்கொண்டு சொன்னது யார். பச்சை துண்டு அமைச்சர் ஏ.வ.வேலு பேசியுள்ளார். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஸ்டாலின்தான் பச்சை துண்டை போட்டுக்கொண்டுவந்தார். இவரைத்தான் அமைச்சர் ஏ.வ.வேலு குறிப்பிட்டுச் சொல்கிறாரா,அன்றைக்கு 10 ஆயிரம் கோடி அளவுக்கு வருவதைத் தடுத்து நிறுத்திவிட்டு தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் பல்டி அடிக்கிறார்கள். குழந்தைகளுக்கு கிலுகிலுப்பை காட்டி ஏமாற்றுவார்கள் இல்லையா. அதுபோல அமைச்சர் ஏ.வ.வேலு பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் கிலுகிலுப்பை காட்டி ஏமாற்றி வருகிறார். மாமியார் உடைத்தால் அது மண் குடம். மருமகள் உடைத்தால் அது பொன்குடமா. இப்படி இன்றைக்கு வீடு தருகிறோம். பணம் தருகிறோம் என்று 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அழித்து,விவசாயத்தை ஒழித்து,விவசாயிகளின் ரத்தத்தைக் குடித்து அதன் மீது விமான நிலையம் அமைக்கவேண்டுமா. இதன் காரணமாகத்தான் விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.அரசு விவசாயிகளின் மனநிலை அறிந்து செயல்படவேண்டும். யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் திட்டத்தை நிறைவேற்றவேண்டும். இவர்கள் ஆதாயம் பெறவேண்டும் என்பதற்காக விவசாயிகளை அழித்து,ஒழித்து அதன் மூலம் ஆதாயம் பெறவேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது. விவசாயிகள் கிளர்ந்தெழுந்தால் இந்த அரசு தாங்காது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் படிக்க | எதிர்கட்சிகள் பழிச்சொல்லுக்கு பதிலளிக்க எனக்கு நேரமில்லை: முதலமைச்சர் முக ஸ்டாலின்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ