தேசிய அளவிலும், மாநில அளவிலும் கடைபிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு முறையில் பொதுப் போட்டிக்கான ஒதுக்கீடு (Open Competition) அனைத்து சமுதாயங்களுக்குமானது தானே தவிர, ஒரு பிரிவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. பொதுப்பிரிவு  இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு நிறுவனங்கள் முரண்பட்ட நிலையை எடுத்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்தீர்ப்பை பா.ம.க. வரவேற்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேசத்தில் (Uttar Pradesh) காவலர் பணிக்கு நடைபெற்ற ஆள்தேர்வில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பலர், மிக அதிக மதிப்பெண்களை எடுத்திருந்த போதிலும், அவர்கள் பொதுப்போட்டிப் பிரிவில் சேர்க்கப்படாமல், பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்கள் பொதுப்போட்டிப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தால், எத்தனை ஓ.பி.சி (OBC). மாணவர்கள் பொதுப்போட்டிப் பிரிவில் சேர்க்கப்பட்டார்களோ, அத்தனை ஓபிசி மாணவர்களுக்கு கூடுதலாக ஓபிசி பிரிவில் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், அவ்வாறு செய்ய மறுத்ததன் மூலம் ஓ.பி.சி. மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது மட்டுமின்றி, பொதுப்போட்டிப் பிரிவு முழுக்க முழுக்க உயர்சாதியினரை மட்டும் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. இதை  எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் தான் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.


ALSO READ | 20% இடஒதுக்கீடு கோரி, பேரூராட்சிகள் முன் திரண்டு போராட பாமக அழைப்பு


‘‘ பொதுப்போட்டிப் பிரிவு என்பது தகுதியுடைய அனைவருக்கும் சொந்தமானது. ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களோ, வேறு பிரிவைச் சேர்ந்தவர்களோ அதிக மதிப்பெண் எடுத்திருந்தால், அவர்கள் பொதுப் போட்டி பிரிவில் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு அவர்கள் பொதுப் போட்டிப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் போது அவர்களை இட ஒதுக்கீட்டுப் பிரிவினராக கருதுவதோ, அவர்களின் தேர்வை இட ஒதுக்கீட்டுக் கணக்கில் கொள்வதோ கூடாது. அவ்வாறு செய்தால் பொதுப்போட்டி என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான (உயர்சாதிகள்) இட ஒதுக்கீடாக மாறி விடும். அதுகூடாது’’ என்று நீதியரசர் யு.யு.லலித் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு தெளிவாக விளக்கமளித்திருக்கிறது.


பொதுப்போட்டி பிரிவு தகுதியுள்ள அனைவருக்குமானது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்கனவே பல முறை உறுதி செய்திருக்கிறது. எனினும், தமிழ்நாட்டில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில்,  அதிக மதிப்பெண் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை பொதுப்போட்டியில் சேர்க்காமல் எம்.பி.சி. பிரிவில் சேர்த்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சமூக அநீதி இழைத்தது. இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 83 பேர் முதுநிலை ஆசிரியராகும் வாய்ப்பை இழந்துள்ளனர். ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த சமூக அநீதியை சரி செய்து, தகுதியுடையவர்களுக்கு வாய்ப்பு வழங்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் இருமுறை தீர்ப்பளித்த நிலையில் அதை தமிழக அரசு செயல்படுத்தியிருக்க வேண்டும்; உச்சநீதிமன்றத்திற்கு சென்றிருக்கக் கூடாது. ஆனால்,  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது; அது பெரும் தவறு.


Also Read | அதிமுகவை நிராகரிக்கிறோம்! தேர்தல் பரப்புரை வீடியோவை திமுக வெளியீடு!


உச்சநீதிமன்றத்தில் (Supreme Court) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் இன்னும் ஒரு படி மேலே போய்,‘‘மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பொதுப்பிரிவில் வாய்ப்பளிக்கப்பட்டால் அவர்களே 50 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்களைப் பெறுவர். இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளில் உள்ள சாதிகளுக்கான பிரதிநிதித்துவம் 69 விழுக்காட்டுக்குள் தான் வழங்கப்பட வேண்டும். 69% இட ஒதுக்கீட்டையும் கடந்து 100% இடங்களையும் கைப்பற்ற வேண்டும் என்று இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் நினைப்பது எந்த வகையில் நியாயம்?’’ என்று வாதிட்டிருக்கிறார். சமூகநீதிக்கு எதிரான இந்த வாதத்தை சரி செய்ய வேண்டும் என்று சுட்டிக்காட்டியும், அதற்கான எந்த நடவடிக்கையையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 69% இட ஒதுக்கீட்டுக்குள் தான் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் வாய்ப்புகளைத் தேடிக் கொள்ள வேண்டும்; மீதமுள்ள 31% இட ஒதுக்கீடு என்பது உயர்சாதியினருக்கு சொந்தமானது; அதற்குள் நுழைய இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் முயற்சி செய்யக்கூடாது என்ற பொருள்படும் வழக்கறிஞர் அரிமா சுந்தரத்தின் வாதம் மிகவும் தவறானது; அபத்தமானது என்பதை உச்சநீதிமன்றத் தீர்ப்பு நெற்றிப் பொட்டில் அடித்தது போல கூறியிருக்கிறது.


இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 69 விழுக்காட்டுக்கும் மேல் உரிமை கோரக்கூடாது என்ற வழக்கறிஞர் அரிமா சுந்தரத்தின் வாதத்தை இந்த வழக்குக்கான வாதமாக மட்டும் பார்க்கக்கூடாது. அது தமிழகத்தில்  இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடும். தமிழ்நாடு அரசின் நிலைப்பாடும் அது தான் என மற்றவர்கள் நம்பிவிடக் கூடும். அதற்கு அரசு இடம் தரக் கூடாது.


Also Read | இனி ஆலயத்தில் வீற்றிருப்பார் அம்மா எனும் இதய தெய்வம் ஜெயலலிதா


எனவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும், மக்களின் உணர்வுகளையும் மதித்து, இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 69 விழுக்காட்டுக்கும் மேல் உரிமை கோரக்கூடாது என்று தமிழக அரசின் சார்பில் அரிமா சுந்தரம் முன்வைத்த வாதத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். வேதியியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களுக்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு வழங்குவதில் நிகழ்ந்த குளறுபடிகளை சரி செய்து, அதனால் பாதிக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 82 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் சமூகநீதிக்கு எதிராக செயல்பட்ட ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து அவர்களின் செயல்பாடுகள் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். சமூக அநீதிக்கு துணை போகும் வகையில் வாதிட்ட வழக்கறிஞர் அரிமா சுந்தரத்தை இனி தமிழக அரசு சார்பாக எந்த வழக்கிலும் வாதிட நியமிக்கக் கூடாது என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்றார்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR