வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என  தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து JACTO JEO அமைப்பினர் கடந்த 22-ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக, தலைமைச் செயலக ஊழியர்களும் நாளை போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.  அதேப்போல் ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக அனைத்து பல்கலை., அலுவலக பணியாளர்கள் நாளை ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். 


நாளைக்குள் தீர்வு கிடைக்காத பட்சத்தில் வரும் பிப்.1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அலுவலக பணியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்துள்ளார்.


இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது..


"மக்கள்பணியை நாம் அனைவரும் ஒன்றுபட்டு தொய்வின்றி தொடர்ந்து மேற்கொள்வோம். எனது அன்பான வேண்டுகோளை ஏற்று நாளையே அனைவரும் பணிக்கு திரும்ப கேட்டுக்கொள்கிறேன். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை ஏற்று அரசு ஊழியர்களின்  ஊதிய உயர்வால் தமிழக அரசுக்கு கூடுதலாக 14ஆயிரத்து 500 கோடி நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.  மாநில அரசு மக்களின் நலனுக்காகவே செயல்பட வேண்டும். அரசின் செயல்பாட்டில் அரசு ஊழியர்களுக்கு முழு பங்கு உள்ளது. சுயநலத்தை மட்டும் கருதாமல் மக்கள் நலம் கருதி பணியாற்றவேண்டும். சில நேரங்களில் சுயநலத்தை விட்டு கொடுத்து மக்கள்பணியாற்றுவது நமது கடமை." என குறிப்பிட்டுள்ளார்.