தஞ்சாவூர் மக்களுக்கு நற்செய்தி... உதயமானது திருவோணம் வட்டம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Thiruvonam New Revenue Circle: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களை மறுசீரமைப்பு செய்து திருவோணம் என்ற புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
Thiruvonam New Revenue Circle: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு புதிய வட்டமாக திருவோணம் உதயமாகிறது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சட்டப்பேரவையில் அறிவிப்பு
இந்த உத்தரவு குறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022 - 2023ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், 'தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களைச் சீரமைத்து புதிய திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்படும்' என்னும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
மக்கள் படும் சிரமம்
ஒரத்தநாடு வட்டத்திலுள்ள திருவோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், அத்தியாவசியச் சேவைகளான சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளையும், வருவாய்த் துறையின் பிற சேவைகளையும் பெறுவதற்காக ஏறத்தாழ 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரத்தநாடு வட்டத்தின் தலைமையிடத்திற்கு மிகுந்த சிரமத்துடன் வந்து செல்ல வேண்டியுள்ளது.
மேலும் படிக்க | சினிமாவை மிஞ்சிய கொலை சம்பவம் - வண்டலூர் திமுக ஒன்றிய குழு துணை தலைவர் படுகொலை
உத்தரவிட்ட முதல்வர்
இதனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்குப் பொருளாதாரச் செலவுகள் அதிகமாகின்றன. அத்துடன் இந்தச் சேவைகளைப் பெறுவதற்காக அவர்கள் நாள் முழுவதும் செலவிட்டு அலையவும் வேண்டியுள்ளது.
ஒவ்வொரு நாளும் பொதுமக்களின் துயர்துடைப்பதில் மிகுந்த அக்கறை செலுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திருவோணம் பகுதி மக்களின் சிரமங்கள் தம்முடைய கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து அவற்றை உடனடியாகக் களைவதற்கு முடிவு செய்தார்.
உதயமானது திருவோணம் வட்டம்
அந்த முடிவைச் செயல்படுத்தும் விதமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களையும் சீரமைத்து, காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வெங்கரை ஆகிய 4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய திருவோணம் வருவாய் வட்டத்தினை உருவாக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குரிய அரசாணை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள் - திமுக அமைச்சர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ