அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ், சிசிடிவி பொருத்தும் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த 4 வார அவகாசம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை : பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ், சிசிடிவி பொருத்தும் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த 4 வார அவகாசத்தை உயர்நீதிமன்றம் தந்துள்ளது. 
 
பள்ளி வாகனங்களில் மாணவ மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்களை தடுக்கும் வகையிலும், பிள்ளைகளை பெற்றோர் கண்காணிக்கும் வகையிலும் அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என கோபி கிருஷ்ணன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு கடந்த 18ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது. பின் 22 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், அனைத்து பள்ளி வாகனங்களிலும் GPS கருவி, சிசிடிவி கேமிரா பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 


ஆனால், இதுவரை அது குறித்த நடவடிக்கைகள் குறித்து எந்த விவரமும் இல்லை. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு, 22ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்குறுதியை தமிழக அரசு நான்கு வாரங்களில் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.