கொரோனா பரவலை பயன்படுத்தி பயணிகள் ரயில்களை விரைவு வண்டிகளாக மாற்றும் திட்டத்தை அரசு கைவிட  வேண்டும் என்று பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,  தமிழ்நாட்டில் இயக்கப்படும் 23 பயணியர் தொடர்வண்டிகள் உட்பட நாடு முழுவதும் 508 பயணியர் தொடர்வண்டிகளை (Passenger Trains) விரைவுத் தொடர்வண்டிகளாக (Express Trains) மாற்றும்படி  தொடர்வண்டித் துறைக்கு இந்திய தொடர்வண்டி வாரியம் ஆணையிட்டிருக்கிறது. பயணிகள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் வணிக நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கதாகும்.


அனைத்து மண்டல ரயில்வேத் துறைகளுக்கும் தொடர்வண்டி வாரியம் அனுப்பியுள்ள ஜூன் 17&ஆம் தேதியிட்ட ஆணையில், 200 கி.மீ தொலைவுக்கும் கூடுதலாக இயங்கும் அனைத்து பயணியர் வண்டிகளும் விரைவு வண்டிகளாக மாற்றப்பட வேண்டும் என்றும், அவ்வாறு மாற்றப்பட்டது தொடர்பான அறிக்கை இன்றைக்குள் (19.06.2020) தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணியர் வண்டிகளின் நிறுத்தங்களைக் குறைத்தும், வேகத்தை அதிகரிப்பதன் மூலமும் அவை விரைவு வண்டிகளாக மாற்றப்பட வேண்டும் என்றும் இந்தியத் தொடர்வண்டி வாரியம் ஆணையிட்டிருக்கிறது.


NEET போட்டித் தேர்வுக்கான online பயிற்சி வகுப்பினை துவங்கிவைத்தார் முதல்வர்!...


தொடர்வண்டி வாரியத்தின் ஆணைப்படி தெற்கு தொடர்வண்டித் துறையில் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 17 வழித்தடங்களில் சென்று வரும் 34 தொடர்வண்டிகள் விரைவு வண்டிகளாக மாற்றப்படும். இவற்றில் 24 தொடர்வண்டிகள் தமிழ்நாட்டிற்கு உள்ளேயும், தமிழகத்திலிருந்து கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இயக்கப்படுபவை ஆகும். இந்த பயணிகள் தொடர்வண்டிகள் அனைத்தும் எப்போதும் அதிக பயணிகளுடன் பயணிக்கக் கூடியவை ஆகும். மக்களிடம் அதிக வரவேற்பை பெற்ற இந்த பயணிகள் வண்டிகளின் சேவை இப்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு விலக்கப்பட்ட பிறகு அவை அனைத்தும் அதிக கட்டணத்துடன், அதிக வேகத்துடன் கூடிய விரைவு வண்டிகளாக இயக்கப்படும்.


இந்தியத் தொடர்வண்டி வாரியத்தின் இந்த முடிவு ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலனுக்கு எதிரானது ஆகும். ஏழை மற்றும் ஊரக மக்களின் போக்குவரத்து வாகனங்களாக திகழ்பவை பயணியர் வண்டிகள் தான். பேருந்துகளிலும், விரைவு வண்டிகளிலும் பயணிக்க வசதியில்லாத மக்களுக்கு பயணியர் தொடர்வண்டி தான் பெரும் வரப்பிரசாதம் ஆகும். உதாரணமாக விழுப்புரத்திலிருந்து 335 கி.மீ  தொலைவில் உள்ள மதுரைக்கு  சாதாரண விரைவு வண்டிகளில் பயணிக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் ரூ.255 கட்டணம் செலுத்த வேண்டும். சாதாரணப் பேருந்தில் பயணிக்க குறைந்தபட்சக் கட்டணம் ரூ.297 ஆகும். ஆனால், பயணிகள் வண்டியில் 65 ரூபாயில் எளிதாக பயணிக்க முடியும்.


அதேபோல், விழுப்புரத்திலிருந்து திருப்பதிக்கு 265 கி.மீ தொலைவாகும். இதற்கு விரைவு வண்டியில் பயணிக்க ரூ. 230, பேருந்தில் பயணிக்க ரூ.275 கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில் பயணிகள்  வண்டியில் பயணிக்க ரூ.55 மட்டும் தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதனால் இந்த வண்டிகளை தங்களுக்கு மிகவும் நெருக்கமான வாகனங்களாக மக்கள் கருதுகிறார்கள். இந்த வண்டிகளில் பயணிப்பது ஏழை மக்களுக்கு செலவு இல்லாததாக இருந்து வருகிறது. இனி இந்த தொடர்வண்டிகளில் பயணிக்க மக்கள் 5 மடங்கு வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.  இது ஏழைகளின் தொடர்வண்டி பயண உரிமையை பறிக்கும் செயலாக அமைந்து விடக் கூடும். இது என்ன நியாயம்?


இந்தியா விடுதலை அடைந்த காலத்திலேயே விரைவுத் தொடர்வண்டிகளும் அதிவிரைவு வண்டிகளும் இயக்கப்பட்டன. 1956-ஆம் ஆண்டிலேயே குளிரூட்டப்பட்ட வண்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்பிறகும் தொடர்வண்டித்துறையில் பல்வேறு மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்பட்ட போதிலும் ஒருபுறம் முன்பதிவு வசதி கூட இல்லாத பயணியர் தொடர்வண்டிகள் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கும் கூடுதலாகக் கூட இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 500 கிலோ மீட்டர் தொலைவை 5 மணி நேரத்தில் கடக்கும் அளவுக்கு விரைவு வண்டிகள் வந்தாலும் கூட, அந்த தொலைவை இரு நாட்களில் கடக்கும் பயணியர் வண்டிகள் இன்றும் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதனால் மற்ற விரைவுத் தொடர்வண்டிகளின் இயக்கத்துக்கு சில தடங்கல்கள், வருவாய் இழப்பு என பல பாதிப்புகள் இருந்தாலும் கூட, அவை தொடர்ந்து இயக்கப்படுவதற்கு காரணம், இந்தியாவின் அடித்தட்டு கிராம மக்கள் மீது அரசாங்கம் காட்டும் அக்கறை ஆகும். அந்த அக்கறையை லாப நோக்கமோ, வல்லுனர் குழு பரிந்துரைகளோ பறித்து விட முடியாது. அவ்வாறு பறித்தால் அது மக்கள் நலனுக்கான அரசாங்கமாக இருக்க முடியாது.


மீண்டும் பூட்டுதல் இல்லை; Unlock 2.0-வுக்கு தயாராகுங்கள் -பிதமர் மோடி உறுதி!...


எனவே, மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு 200 கிலோ மீட்டர் தொலைவுக்கும் கூடுதலாக  இயக்கப்படும் பயணியர் தொடர்வண்டிகளை விரைவுத் தொடர்வண்டிகளாக மாற்றும் திட்டத்தை இந்திய தொடர்வண்டி வாரியம் கைவிட வேண்டும். ஏழைகளும் இந்தியாவின் பங்குதாரர்கள் என்பதை அங்கீகரிக்கும் வகையில், பயணியர் வண்டிகளை கூடுதல் வசதிகளுடன் தொடர்ந்து இயக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.