H. ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடியாது: உயர்நீதிமன்றம்!
பாஜகவின் தேசிய செயலாளர் H. ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜகவின் தேசிய செயலாளர் H. ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒட்டன் சத்திரம் பெரியார் சிலை பற்றிய ஹெச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்த ஹெச். ராஜா, தனது முகநூல் நிர்வாகி தனக்கு தெரியாமலே, பெரியார் சிலை பற்றிய சர்ச்சை பதிவை பதிவிட்டு விட்டதாகவும் விளக்கம் அளித்து இருந்தார்.
அவரின் இந்த பதிவை அடுத்து, பலர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். அவரின் இந்த பதிவால், கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல்குண்டு வீசப்பட்டது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்த பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. சென்னையில் நடந்து சென்ற பிராமணர்களின் பூணூல் அறுக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடந்தன.
இந்த சம்பவங்களுக்கு H. ராஜாவின் சர்ச்சைக்குரிய கருத்துதான், இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு காரணம் என்று கூறி அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் ஆனூர் ஜெகதீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ஜெகதீசன் வழக்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததற்காக ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி மனு அளித்திருந்தார்.
தனி நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
H.ராஜா மீது காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அவகாசம் வழங்காமலேயே நீதிமன்றத்தை ஜெகதீசன் அனுகியுள்ளார் எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன் என நீதிபதி உத்தரவிட்டார்.