சென்னை மக்களே உஷார், இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்
இன்று முதல் (23 ஆம் தேதி) சென்னையில் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகள் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதுபோல சாலை விபத்துகள் ஏற்பட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் குறிப்பாகச் சென்னையில் சாலை விபத்துகளும் அதில் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம் உள்ளது. இதுபோன்ற விபத்துகள் ஏற்படும் போது, உயிரிழப்புகளைத் தடுக்க தமிழக அரசு ஏற்கனவே நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தைக் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது.
அதேபோல சென்னையில் விபத்துகளைக் குறைக்கவும் கூட சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகச் சென்னையில் கடந்த 2021ஆம் ஆண்டு மட்டும் இரு சக்கர வாகன விபத்துக்களில் 611 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3,294 பேர் காயம் அடைந்ததுள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாததால் 477 இருசக்கர வாகனம் ஓட்டியவர்களும் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த 134 பயணிகளும் உயிரிழந்தனர். அதேபோல 2929 வாகன ஓட்டிகளும் பின்னிருக்கையில் அமர்ந்த 365 பயணிகளும் காயமடைந்துள்ளனர். குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் 5 மாதங்களில் சென்னையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். ஹெல்மெட் போடாமல் பின் இருக்கையில் அமர்ந்த 18 பேரும் பலியாகி உள்ளனர்.
அதேபோல் கடந்த 5 மாதங்களில் 741 பேர் இருசக்கர வாகன ஓட்டிகள், பின் இருக்கையில் அமர்ந்து இருந்த 127 பேர் என மொத்தம் 841 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகச் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தரவுகளின் அடிப்படையில் விபத்துகளைக் குறைக்கச் சென்னை போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.
இந்த நிலையில் தற்போது இத்தகைய விபத்துகளை தவிர்க்க இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர், பின்னர் அமர்ந்து செல்பவர்கள் என இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் இந்த இரு புதிய விதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.