டெல்டா விவசாயிகளுக்கு ரூ.56.92 கோடி நிதி: முதல்வர்
டெல்டா விவசாயிகளுக்கு 56.92 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:-
குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படவில்லை. கடும் வறட்சி மற்றும் தர வேண்டிய உரிய நீரை கர்நாடகம் தராதது உள்ளிட்ட காரணங்களால் மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு குறைவாகவே உள்ளது. விகிதாச்சார முறைப்படி பாசனத்திற்கு போதுமான தண்ணீரை கர்நாடகம் திறக்கவில்லை.
ஆண்டுதோறும் ஜுன் 12-ல் குறுவை சாகுபடிக்காக மேட்டூரிலிருந்து நீர் திறக்கப்படும். ஆனால் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் மட்டுமே நீர் திறந்து விடப்படும். தற்போது அணையின் நீர்மட்டம் 23.68 அடியாக மட்டுமே உள்ளது. இதனால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் உள்ளது.
இதனையடுத்து டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.56.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 3.16 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் வறட்சி காரணமாக குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டும் மேட்டூர் அணை திறக்கப்படாததல், விவசாயிகளின் நலன் கருதி மேற்கண்ட நிதி ஒதுக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். மேட்டூர் மேலும் டெல்டா மாவட்டங்களுக்கு இந்த ஆண்டும் 12 மணி நேர இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். நடப்பாண்டு குறுவை தொகுப்பு திட்டம் ரூ.56.92 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடவு எந்திரங்களுக்காக ஏக்கருக்கு ரூ.4,000 வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் உயிர் உரங்களுக்காக ஏக்கருக்கு ரூ.520 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.1,200 என 100 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயறு வகை பயறுகளின் சாகுபடியை ஊக்கப்படுத்த விதைகளுக்கு ஏக்கருக்கு ரூ.960 வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது நெற்பயிருக்கு மாற்றாக பயறு வகை பயிர்கள் 1.32 லட்சம் ஏக்கரில் பயிரிட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நடைபெற வேண்டிய குறுவை சாகுபடி குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மேட்டூர் அணையின் நீர்மட்டம், கர்நாடகாவிடமிருந்து பெற வேண்டிய நீர் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.