Girl Death By Eating Shawarma: நாமக்கல் பரமத்தி சாலையில் ஐவின்ஸ் என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் (செப். 16) இரவு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 13 பேர் உணவருந்த சென்றிருக்கின்றனர். அங்கு அவர்கள் ஷவர்மா மற்றும் சிக்கன் ரைஸ் உள்ளிட்ட துரித வகை உணவுகளை சாப்பிட்டு விட்டு இரவு கல்லூரியின் விடுதிக்கு திரும்பி சென்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உணவு ஒவ்வாமை


அதனை தொடர்ந்து, அங்கு உணவருந்திய 13 மாணவ மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக விடுதி காப்பாளர்கள் மாணவ மாணவிகளை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மாணவ மாணவிகளுக்கு அந்த உணவகத்தில் உணவு உட்கொண்டதால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாக கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 


அதேபோல், சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த கவிதா, தனது மகள் கலையரசி (14), மகன் பூபதி, தாய் சுஜிதாவுடன் ஐவின்ஸ் கடையில் ஷவர்மா மற்றும் பிரியாணி ஆகியவற்றை சாப்பிட்டுள்ளனர். வீடு திரும்பிய நிலையில் அவர்களுக்கும் வாந்தி, மயக்கம், காய்ச்சல் ஆகியவை ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின் அங்கிருந்து நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


மேலும் படிக்க | அம்மா உணவகத்தில் அதிர்ச்சி! சாம்பார் சாதத்தில் அரணை


உயிரிழந்த சிறுமி 


இந்நிலையில் சிறுமி கலையரசி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். உயிரிழந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், ஐவின்ஸ் உணவகத்தில் உணவருந்திய 19 பேர் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கடைக்கு சீல்


இந்நிலையில், நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் நேரில் சந்தித்து உடல் நலன் குறித்து கேட்டறிந்தார். அதன்பின் சம்மந்தப்பட்ட ஐவின்ஸ் என்ற உணவகத்திற்கு ஆட்சியர் உமா மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் ஷவர்மா தயாரிக்க உபயோகப்படுத்தப்படும் இயந்திரம் சுகாதாரமற்று அசுத்தமான நிலையில் இருந்தது. 


மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகத்தில் இருந்த கோழி இறைச்சியை ஆய்விற்காக எடுத்து சென்றனர். இதனையடுத்து ஐவின்ஸ் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் உணவக உரிமையாளர் நவீன்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நாமக்கல் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்று, ஷவர்மா, துரித உணவுகளை உண்பதன் மூலம் உடல்நல கோளாறு ஏற்பட்டு பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் ஷவர்மா உண்டதால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, கேரள சுகாதாரத்துறை இதனை தடுக்கும் விதமாக விதிமுறைகளை மீறி, முறையான உரிமம் இல்லாமல் ஷவர்மா விற்பனை செய்பவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதமும், 6 மாதங்கள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவித்திருந்தது. இதேபோன்ற கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும் என மக்களும் வலியுறுத்துகின்றனர்.


மேலும் படிக்க | சிறுவன் ஆற்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ