தென்னாந்தியாவின் முதல் திரையரங்கம் இடிப்பு... பிரமிக்கவைக்கும் நூற்றாண்டு கடந்த வரலாறு!
South India Permanent Theatre: கோவையில் நூற்றாண்டை கடந்த தென்னிந்தியாவின் முதல் நிரந்தர திரையரங்மான, டிலைட் திரையரங்கம் இடிக்கப்பட்ட நிலையில், விரைவில் வணிக வளாகமாக மாறுகிறது. அந்த திரையங்கம் குறித்த முழு வரலாறையும் இதில் காணலாம்.
South India Permanent Theatre Coimbatore Delite: இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் திரைப்படங்களையும், தொலைக்காட்சி தொடர்களையும் எடுக்க சென்னையிலும், அவுட்டோர் ஷூட்டிங்குகள் வெளியூர்களிலும் எடுக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் சினிமா நுழைந்த ஆரம்ப காலத்தில், தென்னிந்தியாவில் முதன்முதலில் கோவையில்தான் ஸ்டுடியோக்களும், சினிமா தியேட்டர்களும் உருவாக்கப்பட்டன.
அப்படி தென்னிந்தியாவில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட சினிமா தியேட்டர் தான் கோவையில் உள்ள வெரைட்டி ஹால் என்றழைக்கப்படும் இன்றைய டிலைட் திரையரங்கம். கடந்த 1914ஆம் அண்டு இந்த திரையரங்கம் சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவரால் கட்டப்பட்டு முதன் முதலில் வள்ளித் திருமணம் படம் திரையிடப்பட்டது.
முதல் நிரந்தர திரையரங்கம்
இதுதான் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட நிரந்தரமான முதல் திரையரங்கம் ஆகும். இன்றளவும் இந்த திரையரங்கம் அமைந்துள்ள சாலை வெரைட்டி ஹால் சாலை என்று அழைக்கப்படுகிறது. அந்த காலகட்டத்தில் கோவையில் மின்சாரம் இல்லாத நிலையில் மக்கள் மண்ணெண்ணெய் விளக்குகளை தான் பயன்படுத்தி வந்தார்கள்.
மேலும் படிக்க | லால் சலாம் ஒரு அரசியல் பேசும் படம் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
அப்போது கோவையில் செயல்பட்ட முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டும் உதகை அருகே உள்ள பைக்காரா நீர்தேக்கத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை பிரிட்டிச அரசாங்கம் வழங்கி வந்தது.
டிலைட் திரையரங்கம் உருவான வரலாறு
அப்போது வின்சன்ட் சாமிக்கண்ணு வெளிநாட்டில் இருந்து ஒரு ஆயில் இஞ்சினை வரவைத்து அதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து திரையரங்கை இயக்கினார். அந்த மின்சாரத்தை கொண்டு திரையரங்கம் இருந்த சாலை முழுவதும் மின்விளக்குகளை ஒளிர செய்தார்.
பிரிட்டிஷ் இந்தியாவின் ரயில்வே துறையில் வரைகலை நிபுணராக வின்சன்ட் சாமி கண்ணு பணியாற்றி வந்தபோது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தனது நண்பர் சொந்த ஊருக்கு செல்ல பண உதவி செய்துள்ளார். அதற்கு கைமாறாக அவர் தன்னிடம் இருந்த பிலிம் ப்ரொஜெக்டர் கருவியுடன் சில படச்சுருள்களையும் கொடுத்துவிட்டு சென்றார்.
அந்த ஃபிலிம் ப்ரொஜெக்டர் மூலம் பொதுமக்கள் கூடும் இடங்களில் திரைக்கட்டி படங்களை திரையிட்டு வந்தார். இதில் நல்ல வருவாய் கிடைக்க கோவை ரயில் நிலையம் பின்புறம் திரையரங்கை நிறுவினார். இப்படித்தான் கோவைக்கு முதல் நிரந்தர திரையரங்கம் வந்தது. 1950ஆம் ஆண்டு இந்தத் திரையரங்கு வேறொரு நபருக்கு விற்கப்பட்ட நிலையில் வெரைட்டி ஹால் என்ற பெயர் டிலைட் திரையரங்கம் என மாற்றம் செய்யப்பட்டது.
வணிக வளாகமாக மாறுகிறது
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப்பச்சன் என திரை ஜாம்பவான்களின் தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்கள் டிலைட் திரையரங்கில் வெளியிடப்பட்டு வெற்றி விழா கொண்டாடப்பட்டன. கோவையின் வரலாற்றுச் சின்னமான இந்த திரையரங்கம் ஒரு நுாற்றாண்டை கடந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆர் நடித்த 'நினைத்ததை முடிப்பவன்' திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.
தமிழகத்தில், ஒரு நுாற்றாண்டு காலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று இருந்த திரையரங்குகள், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும் நவீன வசதிகளாலும் இன்றைய மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுடன் போட்டியிட முடியாமல் திருமண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாகவும் உருமாறிவிட்ட நிலையில், டிலைட் திரையரங்கமும் இதில் இருந்து தப்பவில்லை.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் படங்கள் திரையிடுவதை நிறுத்திக்கொண்ட இந்த திரையரங்கம், வணிக வளாகம் கட்டுவதற்காக இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து வெரைட்டி ஹால் திரையரங்குக்கு அருகே கடை வைத்து நடத்தி வரும் கண்ணன் என்பவர் கூறும்போது, "வரலாற்று பொக்கிஷமான டிலைட் திரையரங்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது.
'எலும்பு கூடாக காட்சியளிக்கிறது...'
பாபி என்ற இந்தி படம் எப்போது இங்கு திரையிட்டாலும் 50 நாட்களைக் கடந்து ஓடும். ரஜினி, கமல் உள்ளிட்ட நட்சத்திரங்களின் திரைப்படங்கள் இங்கு நூறு நாட்களைக் கடந்து ஓடி இருக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை தினங்களில் எப்போதும் அரங்கு முழுவதும் நிறைந்திருக்கும்.
தென்னிந்தியாவின் முதல் நிரந்தர திரையரங்கம் என பெயர் பெற்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டிடம் இப்போது எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. இனி இந்தக் கட்டடம் மக்கள் பார்வைக்கு இல்லாமல் போவதுடன் வணிக வளாகமாக மாறுவது வருத்தம் அளிக்கிறது" என தெரிவித்தார்.
மேலும் படிக்க | Actor Vishal: அரசியல் கட்சி தொடர்பாக விஷால் வெளிட்ட முக்கிய அறிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ