அம்மா என்ற ஆளுமை இல்லாததால் மோடி தான் எங்கள் டாடி என அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வெள்ளிக்கிழமை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மகாராஜாபுரத்தில் நடந்த கட்சி நிர்வாகி இல்ல விழாவில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்; ``தேர்தல் பயத்தால்தான் ராகுல்காந்தி பிரதமர் மீது ரஃபேல் குற்றச்சாட்டு கூறுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் எந்தவிதக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர் பிரதமர் மோடி. அரசியலுக்காகவே அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.


தே.மு.தி.க, அ.தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வெற்றியின் இலக்கை நோக்கி அ.தி.மு.க சென்றுகொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்பு வேண்டுமென்று வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பிரதமர் அறிவித்துள்ளார். 


கலைஞர் படிப்படியாக முன்னேறி அடித்தட்டில் உள்ள சாதாரண மனிதரும் முன்னேறலாம் என்று வந்த தலைவர். எக்மோர் ரயில்நிலையத்துக்கு அவர் பெயர் வைக்க வேண்டும் என அழகிரி வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் வருத்தப்பட மாட்டோம். அல்வா கொடுத்து ஜெயலலிதாவை கொலை செய்தனர் என்ற அமைச்சர் சி.வி.சண்முகத்தின் குற்றச்சாட்டு உண்மைதான். அம்மா இறப்புக்கு காரணமானவர்களை இறைவன் சும்மா விடமாட்டான். காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ஸ்டாலின் மட்டும்தான் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக கூறுகிறார். டி.டி.வி.தினகரன் குக்கர் சின்னத்துக்குதான் மேல் முறையீடு செய்ய வேண்டும். அவருக்கும் இரட்டை இலைக்கும் என்ன சம்பந்தம். இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமியிடம் பத்திரமாக உள்ளது.


அம்மா என்ற ஆளுமை இல்லாத இடத்தில் மோடிதான் எங்கள் டாடி. இந்தியாவின் டாடி. மோடி பிரதமராக வரக் கூடாது என்பதற்காக அம்மா எதிர்க்கவில்லை .மோடி மீது அம்மா அவர்கள் நல்ல மரியாதை வைத்திருந்தார்கள். சகோதரர் உணர்வோடு பழகி இருந்தார். அ.தி.மு.க-வில்  மதவாதத்துக்கு வேலை இல்லை. சிறுபான்மையினருக்கு நாங்கள் பாதுகாவலர்கள். அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது’’ எனத் தெரிவித்தார்.