அதிமுக ஆட்சி அடமானம் வைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் அதிமுக என்ற பெயரில் பாஜக ஆட்சியே நடைபெறுகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், தமிழகத்தில் அதிமுக பெயரில் பாஜக ஆட்சியே நடைபெறுகிறது. அதிமுக ஆட்சி அடமானம் வைக்கப்பட்டுள்ளது. தமிழக எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி, தமிழக விவசாயிகளை சந்திக்க மறுக்கும் மோடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மட்டும் எப்படி சந்திக்கிறார்? இதில் எந்த அரசியலும் இல்லை எனக்கூறுவதை எப்படி நம்புவது?


வாழவைத்த தமிழகம் என்று கூறி வந்த ரஜினிகாந்த், தற்போது மட்டும் ஏன் நான் பச்சை தமிழன் என்று கூறுகிறார். அரசியலில் நுழைவதற்காக தான் இப்படி கூறுகிறார். தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும். கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் வராது, ஆனால் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு அரசியல் தலைவர்கள் மட்டும் வருவார்கள் என்றால் அது எப்படி நியாயமாகும்?


தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுப்போய் இருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்தில் நானும் உடன்படுகிறேன். ஆனால், தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலுமே அடிப்படை அமைப்பு கெட்டுப்போய் உள்ளது. இந்தியாவின் பொருளாதார கொள்கை, கல்விக் கொள்கை, நீர் மேலாண்மைக் கொள்கை இப்படி பலவும் கெட்டுப்போய் உள்ளன என அவர் பேசினார்.