உழைக்கும் மக்களின் உரிமை திருநாளான மே தின நன்னாளில் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "உழைப்பின் மேன்மையினையும், உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்கு உணர்த்தும் வண்ணம் உழைப்பாளர் தினத்தை உவகையோடு கொண்டாடி மகிழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் உளமார்ந்த "மே தின" வாழ்த்துகள்!!


உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, கணக்கில்லா வேலை நேரம், கொத்தடிமைத்தனம் ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாளர் பெருமக்கள் பல ஆண்டுகளாக போராடி தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த தினம் மே தினம்


உழைப்பாளர்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டு மறுக்கப்பட்டதை எதிர்த்து, ஓயாது போராடிய தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உடல் உழைப்பின் அவசியத்தையும், அதன் மேன்மை மிக்க சிறப்பினையும் உலகிற்கு உணர்த்துகின்ற திருநாளாகவும், இந்த நாள் விளங்குகிறது. உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு உலகளாவிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்நாள் நாடுகளின் எல்லைகளைக் கடந்து, உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் உரித்தான நாளாக கொண்டாடப்படுகிறது. 


உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும். உழைப்புதான் உடல் வலிமை தரும். உழைப்பின் பயனால் கிடைக்கும் இயற்கை மனநிறைவளிக்கும். நம்பிக்கையோடு உழைத்தால், வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம் என்பதை தெரிவித்துக் கொண்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் மீண்டும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.