ஈஷாவின் கொரோனா நிவாரண பணிகளுக்காக மேலும் ரூ.2.3 கோடி வழங்கிய சத்குரு
ஈஷா அவுட்ரீச் சார்பில் கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நிவாரண பணிகளுக்காக சத்குரு மேலும் ரூ.2.3 கோடி நிதியை வழங்கியுள்ளார்.
ஈஷா (Isha) அவுட்ரீச் சார்பில் கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நிவாரண பணிகளுக்காக சத்குரு மேலும் ரூ.2.3 கோடி நிதியை வழங்கியுள்ளார். அவர் ‘circa 2020' என்ற தலைப்பில் வரைந்த 3-வது ஓவியத்தின் மூலம் இந்நிதி திரட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 'முழுமையாக வாழ்’ என்ற தலைப்பில் சத்குரு (Sadhguru) வரைந்த முதல் ஓவியம் ரூ.4.14 கோடிக்கும், ஈஷாவின் கம்பீரமான ‘பைரவா’ காளையின் நினைவாக வரைந்த ஓவியம் ரூ.5.1 கோடிக்கும் ஏலம் போனது. அதன்மூலம் வந்த நிதிகளையும் சத்குரு கொரோனா நிவாரணப் பணிகளுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஈஷா அவுட்ரீச் அமைப்பானது கிராமப்புற மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு உதவிகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து கிராம மக்களுக்கு தேவையான பல்வேறு நிவாரண உதவிகளை செய்ய தொடங்கியது.
குறிப்பாக, கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் தொலைதூர மலைவாழ் கிராமங்களில் உதவிகள் செய்து வருகிறது. ஏழை மக்களுக்கு உணவு அளிப்பது, மருத்துவ மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான மருத்துவ கருவிகள், முக கவசம், சானிடைசர்கள் வழங்குவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக நில வேம்பு மற்றும் கப சுர குடிநீர் வழங்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் பயன்பெற்றனர்.
ALSO READ | கோயில்களை பக்தி மிக்க சமூகத்தின் கைகளில் ஒப்படைப்பவருக்கே எனது ஓட்டு: சத்குரு