ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடத்த அசம்பவித்தை பற்றி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்திய மாணவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது வெடித்த வன்முறைகள் குறித்து தமிழக சட்டப் பேரவையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மிக நீண்ட விளக்கத்தை அளித்திருக்கிறார்.


கடந்த சில நாட்களில் காவல்துறை தரப்பில் கூறப்பட்ட தகவல்களை திருப்பிக் கூறியதைத் தவிர அவரது விளக்கத்தில் புதிதாக எதுவு மில்லை.


சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அளித்த விளக்கத்தில் இடம்பெற்றுள்ள மூன்று முக்கிய அம்சங்கள் 1.மாணவர்கள் அறவழியில் போராட்டம் நடத்தினர்; அவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை, 2.மாணவர்கள் போராட்டத்தில் சமூகவிரோத சக்திகள் ஈடுபட்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர், 3.வன்முறையில் ஈடுபட்ட சமூகவிரோத சக்திகளை கலைக்கும் போது காவல் துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுவது குறித்தும், அது தொடர்பாக வெளியான காணொலி பதிவுகள் குறித்தும் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஆகியவை தான்.


முதல்வர் தெரிவித்துள்ள முதல் இரு கருத்துக்களில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த கருத்து முரண்பாடும் இல்லை. பா.ம.க.வின் நிலைப்பாடும் அது தான். ஆனால், காவல்துறை நடத்திய வன்முறை வெறியாட்டங்களுக்கு ஏராளமான ஆதாரங்கள் வெளியான பிறகும் அவற்றை மூடி மறைக்க முயல்வது ஏன்? என்பது தான் என் வினா.


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் கடந்த 17ஆம் தேதி மாணவர்களின் போராட்டமாகத் தான் தொடங்கியது. மாணவர்கள் மிகவும் கண்ணியமாகத் தான் போராட்டத்தை நடத்தி வந்தனர். ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு உதாரணமாகவே மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வந்தது. இப்போராட்டத்தில் மாணவர்களுடன் வேறு சில அமைப்பைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். 


எனினும், போராட்டம் கட்டுப்பாட்டுடன் தொடர்ந்தது. ஆனால், மாணவர்களின் போராட்டத்தை தங்களின் போராட்டமாக மாற்றிக் காட்டி, அரசியல் லாபம் ஈட்ட முயன்று தோல்வியடைந்த சக்திகளும், மாணவர்களின் போராட்டத்தின் மூலம் தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு சீர்குலைந்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதில் குளிர்காய நினைத்த சக்திகளும் 19ஆம் தேதியிலிருந்து தங்கள் தரப்பு ஆட்களை மாணவர்கள் போர்வையில் அனுப்பி, போராட்டத்தை திசை திருப்பின. இதுகுறித்து கடந்த 20ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்திருந்தேன். உளவுத்துறை மூலம் அரசுக்கும் இது தெரியவந்திருக்கும். அதனடிப்படையில் அரசு கவனமாக இச்சிக்கலை கையாண்டிருக்க வேண்டும்.


ஆனால், அரசு அப்போதெல்லாம் உறங்கிக் கொண்டிருந்து விட்டு, கடைசி நாளில் கண்மூடித்தனமாக மாணவர்களையும், அவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உதவிய நடுக்குப்பம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளின் மக்களையும் தாக்கியிருக்கிறது. ஐஸ் ஹவுஸ் காவல்நிலையம், வடபழனி காவல்நிலையம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியது சமூக விரோத சக்திகள் தான். வேறு சில இடங்களிலும் காவல்துறை வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளன. அவை திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் தான் என்பதில் ஐயமில்லை.


ஆனால், அவற்றைத் தவிர மற்ற அனைத்து வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டவர்கள் காவல்துறையினர் தானே? சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்களுக்கும், குடிசைகளுக்கும் காவலர்கள் தீ வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கின்றனவே? பல இடங்களில் காவல் துறையினர் கற்களை வீசி பொதுமக்களை தாக்கும் காட்சிகளும் பரவுகின்றனவே? இந்த வன்முறைகள் நடந்து 6 நாட்களாகியும் காணொலிகளில் உள்ளவர்கள் காவலர்கள் இல்லை என்று அரசால் நிரூபிக்க முடியவில்லையே? இதற்கு பிறகும் உண்மையை ஒப்புக் கொண்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்வது ஏன்?


நடுக்குப்பத்தில் புகுந்து பெண்கள் என்றும் பார்க்காமல் மக்களை தாக்கியதும், மீன் சந்தையை தீயிட்டு எரித்ததும் காவலர்கள் தான் என அங்குள்ள மக்கள் கூறியுள்ளனர். ஆனால், போராட்டக்காரர்கள் தான் பெட்ரோல் குண்டு வீசி மீன் சந்தையை தீயிட்டு எரித்ததாக உண்மைக்கு மாறான தகவலை சட்டப்பேரவையில் முதல்வர் கூறுவது எந்த வகையில் நியாயம்? என்பது தெரியவில்லை. இன்னொரு புறம் காவல்துறையினருக்கு எதிரான ஆதாரங்களை அழிக்கும் செயல்கள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.


வாகனங்களையும், குடிசைகளையும் எரித்தவர்கள் உண்மையான காவலர்கள் அல்ல... காவலர்கள் உடையணிந்து மாறுவேடத்தில் வந்த போக்கிலிகள் என்ற ரீதியில் காவல்துறையினரே தகவல்களை பரப்பி வருகின்றனர். இறுதியில் இதுதான் உண்மை என்று கூறி இவ்விவகாரத்தை முடித்து விடக்கூடும்.


காவல்துறையினர் அத்து மீறியிருந்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறுகிறார். காவல்துறையினரின் அத்துமீறல்கள் குறித்து அவர்களே விசாரிப்பார்களா? அவ்வாறு விசாரித்தால் உண்மை வெளிவருமா? காவல்துறையினராக இருந்தாலும், சமூக விரோத சக்திகளாக இருந்தாலும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கையும்.


காவல்துறையினர் தவறு செய்யவில்லை என்று முதல்-அமைச்சர் நம்பினால் அவர்களை சி.பி.ஐ. விசாரணை என்ற அக்னி பரிட்சைக்கு உள்ளாக்க வேண்டியது தானே? மடியில் கனமில்லையேல் வழியில் பயம் ஏன்?


இதனிடையே சென்னை வன்முறையில் காயமடைந்த காவலர்களுக்கு தலா ரூ.10,000 நிதி உதவியை சென்னை மாநகரக் காவல் ஆணையர் அறிவித்திருக்கிறார். இது காவலர்களை பாதிக்கப்பட்டவர்களாக காட்டும் உத்தி என்றாலும், காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கு வதை பா.ம.க. வரவேற்கிறது. அதேநேரத்தில் வாழ்வாதாரத்தையும், உடைமைகளையும் இழந்ததுடன், காவலர்களின் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான நடுக்குப்பம் மக்களுக்கு இன்னும் இழப்பீடும், உதவியும் வழங்காதது ஏன்?


தமிழக அரசும், முதல்- அமைச்சரும் சொன்ன பொய்யையே திரும்பத்திரும்பச் சொல்லி உண்மையாக்க முயற்சிக்காமல் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் முடிவில் ஏற்பட்டவன் முறைக்கு காரணமான அனைத்து சக்திகளையும் அடையாளம் கண்டு தண்டிக்க வசதியாக சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும். பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் பகுதி மக்களுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.


இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்