அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த சுப்ரீம் கோர்ட் தடைவிதித்திருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாணவர்கள் புரட்சிக் காரணமாக தமிழக அரசு குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டசபையில் சட்டம் இயற்றியது.
மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த சுப்ரீம் கோர்ட் தடைவிதித்திருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாணவர்கள் புரட்சிக் காரணமாக தமிழக அரசு குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டசபையில் சட்டம் இயற்றியது.
இந்த ஆண்டு மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போராட்டம் எழுச்சியை ஏற்படுத்தியது. அதன் எதிரொலியாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டுக்கான தடை தகர்ந்தது.
மதுரை மாவட்டத்தில் கடந்த 5-ம் தேதி அவனியாபுரத்திலும், 8-ம் தேதி தொட்டப்பநாயக்கனூரிலும், 9-ம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, வரலாற்று சிறப்புமிக்க உலகத்தமிழர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ் ராவ் ஜல்லிக்கட்டை துவங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தனி கேலரி அமைக்கப்பட்டு உள்ளது. 1000 காளைகளும், 1650 மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மாடுபிடி வீரர்களுக்கு நன்கொடையாளர்கள் மூலம் தங்கக்காசுகள், ஒரு கார், 5 புல்லட் மோட்டார் சைக்கிள்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு மொபட், சைக்கிள்கள், 2 பசுமாடுகள், 500 செல்போன்கள், பீரோ, கட்டில்கள், மின்விசிறி போன்ற பரிசுகள் வழங்க தயாராக உள்ளன.
ஜல்லிக்கட்டை காண நடிகர் லாரன்ஸ் வருகை தந்தார். அவர் பேட்டி அளிக்கையில், மாணவர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியால் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.