ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூரில் போலீசார் தடியடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த பேரணியின் போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும் அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தப்பட்டது. வாடிவாசல் அருகே கூடிய இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாடிவாசல் முன் அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அலங்காநல்லூரில் மட்டும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். போட்டி நடைபெறும் திடல், காளைகள் அவிழ்த்து விடப்படும் வாடிவாசல் போன்றவை சீல் வைக்கப்பட்டன.
போலீசார் அனுமதி அளித்ததை அடுத்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. வாடிவாசல் முன்பு திரண்டிருந்த மக்கள், பீட்டா மற்றும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். அவர்கள் தடை செய்.... தடை செய்.... பீட்டா அமைப்பை தடை செய்.... அனுமதி கொடு... அனுமதி கொடு... ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடு... என்ற கோஷங்களை எழுப்பினர்.
அப்போது வாடிவாசல் வழியாக தடையை மீறி, காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப் பாய்ந்த காளையை பார்த்த உற்சாகத்தில், அங்கு கூடியிருந்த மாடுபிடி வீரர்கள் காளையை பிடிக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும் இளைஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு போராட்டது. அப்போது போலீசார் பயங்கரமாக தடியடி நடத்தினர். இந்த தாக்குதலில் சிக்கிய பலருக்கு காயம் ஏற்பட்டது. பேரணியின் போது காளைகளை அவிழ்த்து விட முயன்றதால் தடியடி நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவிழ்த்து விட முயன்ற காளைகளையும் போலீசார் பிடித்துச் சென்றனர்.
ஏராளாமானோரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து பேரணி மற்றும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் கலந்து கொள்ள பிற ஊர்களில் இருந்தும் அலங்காநல்லூர் நோக்கி ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர். கூட்டம் அதிகரித்து வருவதாலும் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. தற்போது அலங்காநல்லூர் போர்க்களமாக காட்சி தருகிறது.