ஜல்லிக்கட்டு போராட்டம்: இயல்பு நிலைக்கு தமிழகம் திரும்பியது
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது.
இதையடுத்து பேருந்துகள் இயங்கத் தொடங்கியது. ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாததால் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தினர்.
சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டு இரவு, பகலாக போரட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையில் ஜல்லிக்கட்டு தடைக்கு நிரந்தர சட்டம் இயற்றக் கோரி கடந்த 17-ம் தேதி முதல் மதுரை தமுக்கம் மைதானத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
போராட்டம் நடைபெற்று வந்த தமுக்கம், கோரிப்பாளையம், தல்லாகுளம் பகுதியில் போக்குவரத்தும் இயக்கப்படவில்லை. ஏராளமான கடைகளும், வணிக நிறுவனங்களும் சரிவர இயங்கவில்லை.
அதேபோல் நேற்று கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.
மதுரையில் பயணிகள் ரயிலை போலீசார் மீட்டனர். இதன் பின்னர் ரயில்சேவை சீரானாது. இந்நிலையில் தமுக்கம் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் மாநகர காவல் துறை ஆணையாளர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து மாணவர்களின் ஒரு பிரிவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். மீதமுள்ள மாணவர்கள் மட்டும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் இரவு அங்கிருந்து அகற்றினர்.
தற்போது மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பேருந்து, ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியுள்ளது.